வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2! எஸ்பிபி உள்பட பிரபல பாடகர்களின் ‛ப்ரோமோ’வீடியோ வெளியீடு!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடரின் பாடகர்களுக்கான ‛ப்ரோமோ' வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் மறைந்த பாடகர் எஸ்பிபி உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
Recommended Video
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர், கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

எத்தனை பேர் பங்கேற்பு
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. இதற்கான தலைப்பு பாடலை ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவானது. இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார்.

2ம் பருவம் வெளியாகிறது
நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் இந்த பாட்டுத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான பாடகர்களின் ‛ப்ரோமா' வீடியோ வெளியாகி உள்ளது.

பாடகர்கள் யார் யார்
இதில் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கருத்தும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விஜய் ஜேசுதாஸ் கூறுகையில், ‛‛பாடும்போது கூட உணர்வு ரீதியாக பாட வைத்தார்'' எனவும், ஹரிசரண் கூறுகையில், ‛அழகான பாடலை பாடியுள்ளேன்'எனவும், சங்கர் மகாதேவன் ‛சிறந்த பாடலாசிரியர் கவிஞர்' என வைரமுத்து குறித்து பாராட்டியுள்ளனர். வைக்கோம் விஜயலட்சுமி கூறுகையில், ‛அனைவரும் இந்த ஆல்பம் கேட்டு ஆதரவு வழங்க வேண்டும்' என்றார்.

இசையமைப்பாளர்கள்
முன்னதாக இந்த 2ம் பருவத்தில் இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டவர்களின் இசையமைப்பில் பாடல்கள் வெளிவர உள்ளன.

இயக்குனர்கள் யார் யார்
இயக்குனர்களை பொறுத்தமட்டில் இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications