சிந்தனைச்செல்வன் காட்டம்! வன்னியரசுவை அழைத்து திருமா சொன்ன அந்த விஷயம்.. விஜய் அரசுக்கு புது தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக்கோரிக்கை கொள்கை குறிப்பு புத்தகத்தில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயர்கள் தவிர்க்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... தங்களின் கொள்கை தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றிருக்கும் விஜய் தலைமையிலான அரசில், பெயர்கள் விடுபட்டது திட்டமிட்ட புறக்கணிப்பு என விசிக தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. அதை பற்றி இங்கே பார்ப்போம்..!!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக்கோரிக்கையின் கொள்கை குறிப்பு புத்தகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக சொல்லப்பட்ட குறிப்புகளில், தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பெயர்களை தவிர்த்துள்ளது தவெக அரசு. இந்த தவிர்த்தல் விவகாரம், இப்போது பூதாகரமாகி வருகிறது.

Sinthanai Selvan Thirumavalavan Vanniarasu Vijay Government TVK

தந்தை பெரியார், அம்பேத்கர்

தந்தை பெரியாரையும் அம்பேத்கரையும் தவிர்த்து இட ஒதுக்கீடு கொள்கையை எப்படி வரையறை செய்ய முடியும் ? அவர்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டாமல் இட ஒதுக்கீடு கொள்கையை எந்த அரசும் தங்களின் கொள்கை குறிப்புகளை வடிவமைக்க முடியாது என்கிற நிலையில், அந்த மாபெரும் தலைவர்களின் பெயர்களை தவெக அரசு எப்படி தவிர்த்தது? இது ஏதோ மனித தவறு என்று புறந்தள்ளி கடந்து செல்ல முடியாது.

மாறாக, வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் இந்த புறக்கணிப்பு நடந்திருக்கிறது. இத்தனைக்கும் தங்களின் கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் பெரியாரையும் அம்பேத்கரையும் வைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசில், இப்படி நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இதுகுறித்து, தவெக கூட்டணி அரசில் இருக்கும் விசிக, இதற்கு கடும் எதிர் வினையாற்றி வருகிறது. விசிகவின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், இது குறித்து விஜய்க்கு விரிவாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

சிந்தனைச்செல்வன் விமர்சனம்

அதேபோல், விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வனும் கடுமையாக பதிவு செய்திருக்கிறார். இது குறித்து சுட்டிக்காட்டியுள்ள சிந்தனை செல்வன், "கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த வரலாற்றுச் செய்திகளை இந்த ஆண்டு அடியோடு மறைக்க அல்லது நீக்க காரணம் என்ன? இதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அவர்கள் புதிதாக பொறுப்பேற்றவர்கள். துறையின் அரசு செயலாளரும் அவரை வழிநடத்தும் அரசு தலைமை செயலாளருமே இதற்கு பொறுப்பாவார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

கொள்கை குறிப்பில் பெரும்பாலும் திருத்தங்களை புதிய அரசுகள் மேற் கொள்வதில்லை. அது அப்படியே தொடரும். நலத்திட்டங்கள்தான் திருத்தப்படும் அல்லது சில தருணங்களில் நீக்கப்பட்டு புதியன சேர்க்கப்படும். ஆனால் கொள்கை குறிப்பேட்டை அரசு தலைமைச் செயலாளரின் வழிகாட்டலும் இல்லாமல் மாற்றி இருக்க முடியாது.

வன்னியரசுவிடம் திருமாவளவன் சொன்னது

தமிழக முதல்வர் விஜய், உடனே இதை சரி செய்திட வேண்டும். இந்த வரலாற்று இருட்டடிப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசு தலைமை செயலாளரும் தொடர்புடைய துறையின் அரசு செயலாளரும் சுய விளக்கத்துடன் மன்னிப்பு கோர வேண்டும். வரலாற்றை இருட்டடிப்பு செய்வதை விட பெரிய வன்கொடுமை வேறெதும் இருக்க முடியாது" என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், தவெக அரசில் அமைச்சராக இருக்கும் விசிகவின் வன்னியரசுவை அழைத்து, இது குறித்து முதல்வரை சந்தித்து பேசுமாறும், தவறை திருத்த வேண்டும் என வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் விசிக தலைவர் திருமாவளவன்.

அமைச்சர்களுக்கே வெயிட்டிங் லிஸ்ட்

ஆனால் தவெகவில் புதிய அமைச்சர்களுக்கே முதல்வரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதில்லையாம்.. இந்த தகவலும் நமக்கு எக்ஸ்க்ளூசிவ்வாக கிடைத்துள்ளது.. முதல்வரை அமைச்சர்கள் சந்திக்க வேண்டுமானால், தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியிடம் அமைச்சர்கள் கோரிக்கை வைக்க வேண்டுமாம்.. அவரிடம் விபரங்களை அமைச்சர்கள் சொல்லி, அந்த விபரங்களை ஆராய்ந்து அவர் விருப்பப்பட்டால் மட்டுமே முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட்டை அமைச்சர்களுக்கு வாங்கி தரப்படுமாம்.. இல்லாவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட் தானாம்..

அமைச்சர்களுக்கே இப்படியொரு நிலை என்றால், வன்னியரசுக்கு முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா? என்று தெரியவில்லை.. எனினும், வன்னியரசு எப்படியும் முதலமைச்சரை சந்தித்து, திருமாவின் கோரிக்கையை கொண்டு செல்வார் என்பதே விசிகவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+