பரந்தூர் விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சிப்காட்! இப்போ விவசாயம் பாதிக்கப்படாதா?
சென்னை: பரந்தூரில் புதியதாக விமான நிலையம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் இடம் கைப்பற்றப்பட்டிருந்து. ஆனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று புதிய விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் விஜய் ரத்து செய்தார். இந்நிலையில், விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சிப்காட் அமைப்பதால் மட்டும் விவசாயம் பாதிக்கப்படாதா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சென்னைக்கு என ஒரேயொரு விமான நிலையம்தான் இருக்கிறது. இதுவும் அடுத்த சில ஆண்டுகளில் தனது முழு செயல்பாட்டு திறனை எட்டிவிடும். எனவே, சென்னைக்கு பக்கத்தில் புதிய விமான நிலையம் அமைக்க திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டு, பரந்தூரில் நிலம் அடையாளம் காணப்பட்டிருந்தது.

ஆனால், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். மக்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த விஜய், நான் ஆட்சிக்கு வந்தால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே திட்டத்தையும் ரத்து செய்துவிட்டார். திட்டம் ரத்தானதால், கைப்பற்றப்பட்ட இடம் மீண்டும் அப்பகுதி மக்களுக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதுதான் நடக்கவில்லை.
அதாவது பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் 422 ஏக்கரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது. இப்பூங்காவுக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்பட உள்ளது. இந்த ஊர் பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தும் லிஸ்டில் உள்ள ஊர். விவசாயம் பாதிக்கும் என போராடிய ஏகனாபுரம் ஊருக்கு பக்கத்து ஊர்.
இங்குள்ளது விவசாய நிலம்.. இப்படிப்பட்ட இடத்தில் ஏர்போர்ட் கட்டினால் விவசாயம் பாதிக்கும் என்று சொல்லிதான், புதிய விமான நிலைய திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு கைவிட்டது. அப்படி எனில், தற்போது சிப்காட் வந்தால் மட்டும் விவசாயம் பாதிக்காதா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது சில பாதிப்புகளை ஏற்படுத்த தான் செய்யும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், வேளாண் நிலத்தை அழித்துவிட்டுதான் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று சொல்வதையெல்லாம் எப்படி ஏற்பது? என்பதுதான் தற்போதைய கேள்வி. விஜய் அரசு இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? இது போதாது என்று.. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலங்காலமாக மீனவ மக்கள் வசிக்கும் பகுதியில் புதிய தலைமை செயலகம் கட்டினால், அங்குள்ள மக்களின் நிலை என்ன? சுத்தம் சுகாதாரம் என்று கத சொல்லி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு திட்டமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
