தமிழகத்துக்கு வரும் 'SIR'.. திமுக எதிர்ப்பது எதனால்? சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன? விரிவான விளக்கம்
சென்னை: பீகாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 'SIR' எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், அதிமுக வரவேற்றுள்ளது. SIR என்றால் என்ன? அது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? அதில் உள்ள சிக்கல்கள், சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வெளியிடுகிறது. ஆனால் சில நேரங்களில் அந்த பட்டியலில் பல்வேறு பிழைகள் இருக்கும். ஒரே நபரின் பெயர் இரண்டு இடங்களில் இருப்பது, இறந்தவர்கள் பெயர் இன்னும் பட்டியலில் இருப்பது, அல்லது புதிய வாக்காளர்கள் சேராமல் விடுவது போன்ற சிக்கல்கள் இருக்கும்.
இந்த சிக்கல்களை சரி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் SIR (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களைப் பெற்று புதிய பட்டியலை தயார் செய்வார்கள்.

SIR நடைமுறை எப்படி நடைபெறும்?
SIR நடைமுறையின் போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடி அளவில், பிஎல்ஓ (Booth Level Officer - BLO) மூலமாக வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபாரிப்பார்கள். அப்போது குடியுரிமைச் சான்றுகளாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை சமர்ப்பித்து விவரங்களை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்தல் ஆணையம்
பின்னர், ஒரே வாக்களரது பெயர் பல இடங்களில் பெயர் இருந்தால், அவை நீக்கப்படும். புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள், முகவரி மாறியவர்கள் தங்கள் புதிய முகவரியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் நான்காம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா? சேர்க்கப்படவில்லையா? தவறாக உள்ளதா? என சரிபார்த்து அவற்றை திருத்தம் செய்ய கூறலாம். தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
SIR-ன் நன்மைகள் என்ன?
SIR நடைமுறை வாக்காளர் பட்டியல் பிழையின்றியும், துல்லியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் என்கின்றது தேர்தல் ஆணையம். வாக்காளர் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டவையோ அல்லது பல இடங்களில் இருந்தவையோ சரி செய்யப்படும், புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும், தேர்தலின் நம்பகத்தன்மை அதிகரிக்கும், போலி வாக்குகள் குறையும், உண்மையான வாக்காளர்களின் உரிமை பாதுகாக்கப்படும், இதனால் ஜனநாயகத்தின் அடிப்படை நம்பிக்கை வலுப்பெறும் எனவும் கூறுகிறது.
SIR-க்கு எதிர்ப்பு ஏன்?
இருப்பினும், சில அரசியல் கட்சிகள் SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சிலர் பெயர் தவறாக நீக்கப்படும் அபாயம் உள்ளது, ஆதார் அட்டை அல்லது ஆவணங்கள் இல்லாத ஏழை மக்கள், இடமாற்றிய தொழிலாளர்கள் போன்றவர்களின் பெயர் நீக்கப்படலாம், வாக்காளர் பட்டியலை அரசியல் நோக்கில் மாற்றும் அபாயம் உண்டு என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. மேலும், தேவையான ஆவணங்கள் இல்லாததால் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பீகாரில் நீக்கப்பட்டன. இதனால் தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்தது. இதனால், தமிழகத்திலும், இதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது சில அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது.
திமுக ஏன் எதிர்க்கிறது?
தமிழ்நாட்டில் திமுக அரசு, SIR நடைமுறையை எதிர்க்கிறது என பல முறை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நடைமுறை சரியான காலத்தில் செய்யப்படவில்லை எனவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பட்டியல் திருத்தம் செய்வது பலரின் வாக்குரிமையை பாதிக்கக்கூடும் எனவும் புகார் கூறியுள்ளார். மேலும், இந்த நடைமுறை மாநில அரசுடன் ஆலோசனை இல்லாமல் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவாக இருப்பதாகவும், பல நியாயமான வாக்காளர்களின் பெயர் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் திமுக கூறுகிறது.
பாஜக ஏன் ஆதரிக்கிறது?
மாறாக பாஜக, இந்த நடைமுறையை ஆதரிக்கிறது. போலி வாக்குகள் மற்றும் இரட்டை பதிவுகள் நீங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் நம்பகமாக இருக்க வேண்டும். அதற்காக SIR போன்ற தீவிர சீரமைப்புகள் அவசியம் என்கிறது பாஜக. பாஜகவின் கருத்துப்படி, இது வாக்காளர் பட்டியல் உண்மையாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்யும் நல்ல முயற்சி, அதனால் எதிர்ப்பதற்கான காரணமே இல்லை என்று கூறுகிறது.
அச்சம் என்ன?
SIR என்பது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை நம்பகமாக வைத்திருக்கச் செய்யும் ஒரு முயற்சி என்றாலும், ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் விதம் பற்றிய கவலைகள் சில கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் உள்ளன. காரணம் ஏற்கனவே கூறியது போல பீகாரில் ஒரே பக்கத்தில் ஒரே நபரின் பெயர்கள் பல இடங்களில் இடம்பெற்று இருந்தது, லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமைகள் பாதிக்கப்பட்டது, வெளி மாநில வாக்காளர்கள் இடம்பெற்றது என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் SIR பற்றிய அச்சம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications