துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து கூறிய சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள்!
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்டார் உதயநிதி ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர்.
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய திமுக முன்னாள் எம்.பி எஸ்.எஸ். பழனிமாணிக்கம், "உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்" என கோரிக்கை வைத்தார். இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்" என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதல்வர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். புதிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது.
அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
துணை முதல்வராகி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை மெரினா கடற்கரைக்குச் சென்று சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி. பின்னர் பெரியார் திடலுக்கு சென்றார். இதையடுத்து கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் துணை முதலமைச்சர் என்ற அடையாளத்தை சேர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் சார், மாண்புமிகு தமிழக துணை முதல்வராக புதிய பொறுப்பை ஏற்றுள்ளதற்கு வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துகள் துணை முதலமைச்சர் உதயநிதி அண்ணா. இன்னும் பல சாதனைகள் வர இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications