விருதுநகர் மொத்தமாக மாறிடும்.. சர்வதேச சந்தைக்கு சிவகாசி பட்டாசு! அமைச்சர் கீர்த்தனா சொல்றதை பாருங்க
சென்னை: சிவகாசி பட்டாசு தொழிலுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருப்பதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சீனாவுக்கு நிகராக தமிழ்நாடும் பட்டாசு ஏற்றுமதியில் சாதிக்க முடியும் என்றும், அதற்கான ஏற்றுமதி கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசிய கீர்த்தனா, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். தனது தென்கொரியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய அமைச்சர் கீர்த்தனா விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகரின் தரமே உயர்ந்துவிடும்
பட்டாசு ஏற்றுமதியில் சீனாவுக்கு நிகராக தமிழ்நாடும் ஏற்றுமதி செய்ய வேண்டும். சீனா எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது. ஆனால், நம்ம தமிழ்நாடு இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இன்னும் ஏற்றுமதி செய்யாமல் இருக்கிறோம். ஏற்றுமதியை சட்டத்திற்குட்பட்டு சரியாக எப்படி செய்ய முடியும் என்று கொள்கை உருவாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் விருதுநகரின் தரமே உயர்ந்துவிடும். ஏனென்றால், நமக்கு பக்கத்திலேயே துறைமுகமும் உள்ளது. அதனால், எளிதாக கொண்டு செல்ல முடியும். சிவகாசியை பெரிய அளவுக்கு கொண்டு செல்ல முடியும். நான் கொரியா போன போது, சிவகாசியில் பட்டாசு ஆலைகள் உள்ளது என்பது பற்றி பேசினேன். ஓ... அப்படியா என்று ஆச்சர்யப்பட்டு அவர்கள் கேட்டார்கள். அதேபோல், போலந்து நாட்டில் ஒரு கஸ்டமர் 6 ஆயிரம் கோடிக்கு இறக்குமதி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, முதல்வர் விஜய் வழிகாட்டுதலின் பேரில் இந்த பாலிசியை எப்படி கொண்டு வர வேண்டும் என்று கண்டிப்பாக படித்து இதற்கான ஏற்றுமதியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்" என்று கூறினார்.
தென்கொரியா சென்ற கீர்த்தனா
அரசுமுறை பயணமாக அண்மையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சென்றார். தென்கொரியாவில் சியோலில் உள்ள மோட்டிலிங் நிறுவனத்தின் தலைவரை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக அவரிடம் ஆலோசித்ததாகவும், மோட்டிலிங் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த ஆர்வம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications