சென்னையில் வருகிறது ஸ்மார்ட் ஏஐ பார்க்கிங் திட்டம்.. நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையுமா? விவரம்
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீண்ட காலத்திற்கு பயன்தரக்கூடிய வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் வரப்போகிறது. இதற்கான டெண்டரும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தால் கோரப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும். இந்த திட்டம் எதிர்காலத்தில் சென்னையில் நெரிசலை குறைக்கும். அறிவியல் பூர்வமாக நெரிசலை குறைக்க கையாளப்பட உள்ள ஏஐ தொழில்நுட்பம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள வரைவு வாக்காளர்கள் எண்ணிக்கை வெளியானது . இந்த நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து18 வயதிற்கும் மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை என்பது ஒரு கோடி என்கிற அளவிற்கு இருக்கிறது. 18 வயதிற்கு உள்பட்டவர்களின் எண்ணிக்கை இதில் பாதி என்றாலும் 50 லட்சம் என்கிற அளவில் இருக்கும். மிதக்கும் மக்கள் தொகையை சேர்த்தால் ( பிற ஊரில் இருந்து பிழைக்க வந்தவர்கள்) 2 கோடி என்கிற அளவில் இருக்கிறது.

2 கோடி அளவிற்கு மக்கள்
இந்த 2 கோடி பேரில் தினசரி 20 லட்சம் பேர் வெளியில் வாகனங்களில் சென்று வந்தாலே தாங்க முடியாது. ஆனால் குறைந்தது 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் பயணிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தி நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம், சென்ட்ரல், எழும்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அதேபோல் ஓஎம்ஆர் சாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி சாலை, ஆவடி சாலை, ஈசிஆர் சாலை, அண்ணா சாலை, ரேடியல் சாலைகளில் பல ஆயிரம் வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன.
மக்கள் நெருக்கத்தை பொறுத்தவரை மூச்சுத்திணற வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. மக்கள் பெருக்கம், வாகன நெருக்கம் இவற்றின் காரணங்கள் ஒரு புறம் என்றாலும் வாகன நிறுத்தங்கள் சென்னை முறைப்படுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
டெண்டர் வெளியீடு
எனவே சென்னை பார்க்கிங் திட்டங்களை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் பார்க்கிங் மற்றும் விதிமீறல் கண்காணிப்பு முறையை செயல்படுத்த 'சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்' டெண்டர் கோரியிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் பார்க்கிங் எப்படி இருக்கும்
"'எட்ஜ் ஏ.ஐ.' (Edge AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கண்காணிப்பு கேமராக்கள் (IP Cameras) மூலம் காட்சிகள் பெறப்படும். அவை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம் வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளனவா அல்லது வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உடனடியாக கண்டறிந்துவிட முடியும். அத்துடன் ஏற்கனவே உள்ள பார்க்கிங் டிக்கெட் மென்பொருளுடன், புதிய கண்காணிப்பு மென்பொருளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வாகன நிறுத்தக் கட்டண வசூல் மற்றும் பார்க்கிங் இடங்களை கண்காணிக்கும் பணிகள் ஒருங்கிணைக்கப்படும்.
தடை செய்யப்பட்ட இடங்கள்
இந்த மென்பொருள் மூலம் வாகன நிறுத்த விதிமீறல்களையும் தானாகவே கண்டறிய முடியும். குறிப்பாக, பார்க்கிங் செய்ய தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, நடைபாதைகளை ஆக்கிரமிப்பது, இரட்டை வரிசையில் வாகனங்களை நிறுத்துவது, தவறான திசையில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள் உடனடியாக கண்காணிக்கப்படும். அதேபோல், 4 சக்கர வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதையும் இந்த தொழில்நுட்பம் கண்டறியும்.
கேமராவில் விதிமீறல்கள் பதிவாகும்
விதிமீறல்கள் தொடர்பான காட்சிகள், ஆதாரங்களுடன் தானாக பதிவு செய்யப்படும். பின்னர் வாகனங்களின் பதிவு எண்களை தானாக படித்தறியும் ANPR (Automatic Number Plate Recognition) தொழில்நுட்பத்தையும் எதிர்காலத்தில் இதே கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்பும் தகுதியான நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப்புள்ளி இணையதளமான www.tntenders.gov.in மூலம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் " இந்த தகவலை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் செயலர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
