50 ஆண்டு பயணம்.. என் வாழ்க்கையே சாலமன் பாப்பையாவின் நினைவு தான்.. தழுதழுக்க பேசிய பேச்சாளர் ராஜா!
சென்னை: பட்டிமன்றங்களின் அடையாளமாக இருந்து வந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக காலமானார். 90 வயதில் உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்து வந்த அவர், இன்று காலமானார். பட்டிமன்றங்களில் இதிகாசங்களை பேசி வந்த சூழலில், சாமானிய மக்களின் வாழ்க்கையை பேசியவர் சாலமன் பாப்பையா.
சமூக முற்போக்கு கருத்துக்களை மக்களின் மொழியில், நகைச்சுவையாக பேசி மிகப்பெரிய மாற்றங்களை ஏற்பட விதையாக இருந்தவர். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழக மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அன்பு பெரியோர்களே, அருகை தாய்மார்களே, இனிய குழந்தைகளே என்று தொடங்கும் சாலமன் பாப்பையாவின் குரல் மக்களிடம் இருந்து பிரிந்திருக்கிறது.

1936ல் மதுரை திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, 2000ஆம் ஆண்டிலேயே தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களை நடத்தி உள்ளார்.
இவரின் பட்டிமன்றங்களில் தவிர்க்க முடியாத இரண்டு பேர் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர். இந்த நிலையில் சாலமன் பாப்பையாவின் மறைவு தொடர்பாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில், என் வாழ்க்கையே அவரின் நினைவு தான்.. அவர் இல்லாமல் நான் இல்லை.. தமிழ்ச் சமூகத்துடன் பல வழிகளில் அவர் இணைந்தே இருந்தார். தொலைக்காட்சி வழியாக இலக்கியங்களை கொண்டு சென்றார்.
பட்டிமன்றம் என்ற கலையை மக்களிடம் கொண்டு சென்றார். குடும்பங்கள் அவரை தங்களின் வீடுகளில் ஒருவராக பார்த்து வந்தனர். ஒரு வாரம் முன்பாக கூட ஒரு பட்டிமன்றத்தை நடத்தி கொடுத்தார். திடீரென இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. நன்றாக இருந்தவர்.. காலையில் இப்படி நடந்துவிட்டது. இந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உண்மையா என்ற கேள்வியும், தடுமாற்றமும் மனதில் உள்ளது.
50 ஆண்டுகளாக சாலமன் பாப்பையாவுடன் இருந்திருக்கிறேன். எளிமை என்றால் அவர் தான்.. ஒருநாளும் தன்னை பெரியாளாக கருதியதே கிடையாது. சின்ன குழந்தைகளை கூட அரவணைத்து பேசக் கூடியவர். அவர் எளிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கடைசி வரை அப்படியே இருந்துவிட்டார். அவரை தமிழ்ச் சமூகம் நினைவில் வைத்து கொள்ளும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
