தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வெப்ப அலையும் வீசும்.. வானிலை மையம் தகவல்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சியதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
போதாகுறைக்கு தமிழகத்தில் கத்தரி வெயிலும் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெயிலோடு அனல்காற்றும் வீசி வருகிறது.

கனமழை
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஈரக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகளவாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications