மீனாவிற்கு இணை அமைச்சர் பதவி? லிஸ்ட் ரெடியா? அப்போ நாங்க எதுக்கு.. கொதிக்கும் பாஜக பெண் தலைகள்?
சென்னை: நடிகை மீனா பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாகவும், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சிக்கு உள்ளேயும் இது பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை மீனாவின் கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த இவரின் இரண்டு நுரையீரலும் செயல் இழக்கும் நிலைக்கு சென்றது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர்.

இதனால் மாற்று நுரையீரல் சிகிச்சைக்கு காத்திருந்தவருக்கு டோனர் கிடைக்கும் முன் மரணம் ஏற்பட்டது. புறாக்களின் எச்சம் மூலம் பரவும் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்ற நோய் காரணமாக இவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இந்த நுரையீரல் பாதிப்பிற்கு இடையே இவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் இவர் மரணம் அடைந்தார் என்று செய்திகள் வந்தன. வித்யாசாகருக்கும் மீனாவுக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவரின் மரணத்திற்கு பின் கடந்த சில மாதங்களாக சில முக்கிய நிகழ்வுகள், அதிலும் அரசியல் நிகழ்வுகளில் மீனா பங்கேற்க தொடங்கி உள்ளார்.
மீனாவுக்கு அமைச்சர் பதவியா? பாஜகவில் அதிருப்தி
இப்படிப்பட்ட நிலையில் மீனா விரைவில் பாஜகவில் இணையலாம் என்றும், கட்சியில் அவருக்கு முக்கியப் பதவி அளிக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்தச் செய்தி பாஜகவின் மூத்த தலைவர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னரே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின.
சமீபத்தில் மாநில அளவிலான 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. அப்போதைய ஆலோசனையின்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர்களும் நியமனப் பட்டியலில் இருக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நியமனங்களில் நடிகை மீனா, குஷ்பு மற்றும் இன்னும் இரண்டு பேருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
"நீங்கள் சொல்கின்ற விஷயத்திலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. பாஜகவில் நிறைய பேர் தற்போது இணைந்து வருகிறார்கள். அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால், ஸ்டாலினுக்கு ஆட்சி முடியப் போகிறது. அடுத்த ஆண்டில் தேர்தல் நடக்கப் போகிறது. அடுத்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறதோ, அந்த கட்சியின் பக்கம் எல்லாரும் வந்துகொண்டு இருப்பார்கள். அதனால் நாங்க யார் வந்தாலும் வரவேற்போம். நீங்க எப்படியாவது கூட்டணியை உடைத்துவிடலாம் என்று நினைக்கிறீங்க. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது."
பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இந்தத் தகவலால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மீனாவின் நியமனம் குறித்து கட்சியில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. "அவருக்கு மட்டும் எப்படி உடனே பதவி வழங்கலாம்? அதுவும் அமைச்சர் பதவியா? அவர் அடிப்படை உறுப்பினர் கூட இல்லையே. இதை எப்படி அனுமதிப்பது?" என்ற கேள்விகளை மூத்த நிர்வாகிகள் எழுப்புவதாகக் கூறப்படுகிறது.
நடிகை மீனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் பாஜகவின் மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications