சோனியா காந்தி டிரெஸ்ஸெல்லாம் "இந்திய மசாலா" வாசனையாம்.. இப்போ அவருக்கு பிடித்த உணவு இதுதான்
சென்னை: இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த சோனியா காந்திக்கு ஆரம்பத்தில் இந்திய உணவுகள் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், மசாலா வாசனை கலக்கத்தையும் தந்து விட்டதாம்.. அதனால், ஒரு கட்டத்தில் 4 நாட்கள் தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மட்டுமே சாப்பிட்டாராம்.. ஆனால் இன்று அவருக்குப் பிடித்த உணவு பருப்பு சோறு.. ராஜீவ் காந்தியை சந்தித்தது முதல் நேரு குடும்பத்தில் இன்றும் தொடரும் உணவுப் பழக்கம் வரை பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...!!!
சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தியுடன், உணவு தொடர்பான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.. அதில் தனக்குப் பிடித்த இந்திய உணவுகள் குறித்து சோனியா பேசியுள்ளார்.

சோனியா காந்திக்கு பிடித்த உணவுகள்
"கபாப், சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன், தால் மக்கானி, காஷ்மீரி கோஃப்தா, காஷ்மீரி ஹாக் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். பெங்காலி உணவுகள் மற்றும் குறிப்பாக சூரத் பகுதியைச் சேர்ந்த குஜராத்தி உணவுகளும் பிடிக்கும். இந்தியாவுக்கு வந்த புதிதில், இங்குள்ள உணவுகளை சாப்பிட பழகிக்கொள்ள கொஞ்ச காலம் தேவைப்பட்டது. பிறகு அவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்தேன். அத்துடன் சமைக்கவும் கற்றுக்கொண்டேன்" என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நேரு குடும்பத்தில் ஒரு பழக்கம்
சோனியா இவ்வாறு பேசியபோது, பிரியங்கா காந்தி குறுக்கிட்டு, "எங்கள் வீட்டில் எங்களுக்கு பிடித்த உணவு பருப்பு சாதம்தான்" என்று நினைவுபடுத்தினார்.
உடனே சோனியா, "நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து இன்றுவரை எங்கள் வீட்டில் துவரம் பருப்பு மட்டும்தான் சமைக்கப்படுகிறது. வேறு எந்த பருப்பும் சமைக்கப்படுவதில்லை" என்று கூறினார்.
இதையடுத்து பிரியங்கா பேசும்போது, தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது அம்மா கந்த்வி செய்து கொடுத்ததை நினைவுகூர்ந்தார். அதற்கு சோனியா, கந்த்வி செய்வது ரொம்பவே சிம்பிள் என்று குறிப்பிட்டார். கந்த்வி என்பது குஜராத்தில் பிரபலமான காரமான சிற்றுண்டி வகையாகும்.
இந்திரா காந்தி சமையல் திறமை
இதே உரையாடலில் இந்திரா காந்தியின் சமையல் பற்றியும் பேச்சு வந்தது.. இந்திரா காந்திக்குச் சமைக்கத் தெரியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.
உடனே இதற்கு சோனியா காந்தி விளக்கம் அளித்துள்ளார். தனது மாமியாருக்கு சமையல் செய்யத் தெரியாது என்பது உண்மைதான் என்றாலும், ஒரு உணவைச் சுவையாக மாற்ற அதில் எதை சேர்க்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் தர்பூசணி மட்டுமே சாப்பிட்ட சோனியா!
சோனியா காந்தியின் உணவுப் பழக்கம் குறித்த இந்த உரையாடலுக்கு பின்னால் அவரது வாழ்க்கையின் பழைய நினைவுகளும் இருக்கின்றன. நவம்பர் 10-ம் தேதி வெளியான அவரது சுயசரிதை நூலான "Belonging: A Journey of Love" என்ற புத்தகத்தில் இந்திய உணவுகளுடன் தனக்கு ஏற்பட்ட ஆரம்பகால அனுபவங்களை விரிவாக எழுதியுள்ளார்.
அதில், 1969-ம் ஆண்டு இந்திரா காந்தியுடன் குஜராத்துக்குச் சென்றபோது அங்குள்ள சாப்பாட்டை சாப்பிட சோனியா மறுத்துள்ளார். இந்திய மசாலா பொருட்களின் வாசனையை தாங்க முடியாமல் 4 நாட்கள் தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். ஆனால் பிறகு மெல்ல மெல்ல குஜராத்தி உணவுகளின் டேஸ்ட் தெரிந்ததுமே, அன்று அப்படி நடந்துகொண்டதை நினைத்து முட்டாள்தனமாக உணர்ந்ததாக தன்னுடைய புத்தகத்தில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.
தலைமுடி, உடைகளிலும் மசாலா வாசனை
முதன்முதலில் டெல்லிக்கு வந்தபோது கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் வீட்டில் சோனியா காந்தி தங்கியிருந்தாராம். அப்போது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் வாசனையிலிருந்து தன்னால் தப்பிக்கக்கூட முடியவில்லையாம்.. அந்த வாசனை தனது தலைமுடியிலும் உடைகளிலும் கூட ஒட்டிக்கொண்டதாக சோனியா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இத்தாலிய உணவுகளை மிகவும் மிஸ் செய்ததாகவும், அப்போது தனக்குப் பழக்கமான ரொட்டி, பாஸ்தா, சீஸ், ஆலிவ் எண்ணெய் போன்றவை எளிதில் கிடைக்கவில்லை என்றும் தனது புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
ராஜீவ் காந்தியுடன் காதல்
சோனியா காந்தியின் வாழ்க்கையில் உணவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே ஒரு சுவாரசியமான தொடர்பு இருக்கிறது. இதுபற்றி தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"எனது கதையில் உணவுக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் உண்டு. ஒரு நல்ல சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தபோதுதான் நான் ராஜீவை சந்தித்தேன், நாங்கள் காதலிக்கத் தொடங்கினோம். பல வருடங்களுக்கு பிறகு, இந்தியாவும் அதே போல, ஒவ்வொரு வேளை உணவின் வழியாகவே எனக்குள் வந்தது.
பிடிச்ச பருப்பு சாதம்
ஆரம்பத்தில், உணவுகளின் பன்முகத்தன்மை என்னை வியக்க வைத்தது. அதே சமயம் காரமான சுவை கொஞ்சம் கலக்கத்தை தந்தது.. ஆனால் இன்று, பருப்பு சாதம் எனக்கு வீட்டின் சுவையாக மாறிவிட்டது. அதைச் சாப்பிடாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது."
உணவு என்பது வெறும் பசியை போக்கும் விஷயம் மட்டுமல்ல, ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் குடும்ப நினைவுகளையும் எப்படி ஒருவருக்குள் கொண்டு வருகிறது என்பதற்கு சோனியாவின் இந்த அனுபவங்களே உதாரணமாக இருக்கின்றன...!!!


Click it and Unblock the Notifications
