தவெக விஜய்யை விமர்சிக்காதீங்க.. கட்சியினருக்கு எடப்பாடி அட்வைஸ்? அப்போ அதுதானா? பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றும், எம்ஜிஆரை பாராட்டி பேசியிருப்பதனாலும் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அவர் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 இன்னும் பெயரிடப்படாத படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று விஜய் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் கட்சி பாடல், கட்சிக்கான கொடி, தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு என அனைத்தையும் வெற்றிகரமாக நடத்து முடித்தார். தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்து மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 27 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் தன்னுடைய கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார்? என்பதை கூறிவிட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் எந்த பாதையில் பயணிக்கும் என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிட்டார். குறிப்பாக திமுக மற்றும் பாஜகவை விஜய் எதிர்த்து பேசினார். ஆனால் விஜய் அதிமுக பற்றி விமர்சித்து பேசவில்லை. அதே சமயம் எம்ஜிஆரையும் பாராட்டி பேசியிருந்தார்.
திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசிய விஜய் அதிமுகவை விமர்சித்து பேசாததும், கூட்டணியில் பங்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசியிருப்பதும் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்கலாம் என்றும் இல்லாவிடில் தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விஜய் அதிமுகவை பற்றி விமர்சிக்காததால், விஜயை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தீபாவளிக்கு முன்பு அதிமுக நிர்வாகிகள் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது விஜய்யின் மாநாடு குறித்து எடப்பாடியிடம் கட்சி நிர்வாகிகள் விவாதித்து பேசியுள்ளனர். விஜயை விமர்சிக்கலாமா என்று நிர்வாகிகள் எடப்பாடியிடம் கேட்டதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை. மாறாக எம்ஜிஆரை பாராட்டி பேசியிருக்கிறார். எனவே விஜய்யை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யும் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. இதேபோல் அதிமுகவினரும் தவெகவை பற்றி விமர்சனம் செய்யவில்லை. இந்த சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கும் அல்லது அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். வரும் 6 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் போது விஜய் பேசியது பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications