சென்னையில் தாம்பரம் போல் மாறும் வில்லிவாக்கம்.. தெற்கு ரயில்வே மேஜர் பிளான்.. ரெடியாகும் திட்டம்
சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூரை அடுத்து தாம்பரத்தை 3வது ரயில் முனையம் அமைக்க மேம்படுத்தி வருகிறது. அதேபோல் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக தெற்கு ரயில்வே மேம்படுத்த உள்ளது. தேவையான நிலம் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னை மாநகரம், நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். தினமும் 2 கோடி பேருக்கான பயணத்தேவையை பூர்த்தி செய்வது எளிதானது அல்ல. சென்னையில் புறநகர் ரயில்கள் மட்டும் இல்லை என்றால், அதன் பாதிப்பை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பல லட்சம் மக்கள் புறநகர் ரயில்களை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

சென்னைக்கு வரும் ரயில்கள் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வருகின்றன. வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி(தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் எழும்பூரிலும் நிற்கின்றன. இதில எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்தி வருகிறது.
இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. நாகர்கோவில் ரயில், அந்தோதியா ரயில் உள்ளிட்டவை தாம்பரம் வரை தான் வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையம் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பிறகு மேலும் சில புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை எழும்பூர் கடற்கரை இடையே நான்காவது வழித்தடம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பிறகு நிச்சயம் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் தாம்பரம் ரயில் முனையம் இப்படி என்றால், அந்த பக்கம் மேற்கு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பாதி ரயில்களை நிறுத்த எந்த வசதியும் இல்லை.. தாம்பரம் சென்னை நகரத்திற்குள் இருக்கும் நிலையில், அந்த பக்கம் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள உள்ள ரயில் நிலையமான அரக்கோணம் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னை நகருக்குள்ளேயே 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே விரும்புகிறது.
தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று தான் செல்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக தெற்கு ரயில்வே மேம்படுத்த உள்ளது. அங்கு தேவையான நிலம் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications