லிஸ்ட்டில் 4 தொகுதிகள்.. சவுமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது தெரியுமா? அன்புமணி போடும் பிளான்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளார். அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இந்நிலையில் தான் அவரது மனைவி சவுமியா அன்புமணி வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருக்கிறார். இதற்காக 4 சட்டசபை தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒன்றில் சவுமியா அன்புமணி போட்டியிட உள்ளார். இந்த தொகுதிகள் என்னென்ன? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பாமக தற்போது 2 அணியாக செயல்பட்டு வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இதில் அன்புமணி ராமதாஸ் அணி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
அதிமுக சார்பில் அன்புமணி ராமதாஸ்க்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீண்டும் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்புமணி ராமதாஸ் எம்பியான நிலையில் அவரது மனைவி சவுமியா அன்புமணியை தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அவர் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது அன்புமணி ராமதாஸ் அணிக்கு அதிமுக கூட்டணியில் 17 சட்டசபை தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சவுமியா அன்புமணிய தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி அல்லது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த 4 தொகுதிகளிலும் வன்னியர்கள் அதிகம் உள்ளனர். அதோடு இந்த தொகுதிகளில் பாமக ஏற்கனவே வென்றுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக ஜிகே மணி உள்ளார். பாமகவை சேர்ந்த இவர் ராமதாஸ் அணியில் இருக்கிறார்.
அதேபோல் தர்மபுரி எம்எல்ஏவாக பாமகவை சேர்ந்த எஸ்பி வெங்கடேஷ்ஸ்வரன் உள்ளார். பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏவாக அதிமுகவின் கோவிந்தசாமி உள்ளார். இந்த தொகுதியிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதால் அதனை கேட்டு பெறலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எஸ்எஸ் பாலாஜி உள்ளார். இந்த தொகுதியில் 2006ம் ஆண்டில் பாமக சார்பில் டி மூர்த்தி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அந்த தொகுதிகளில் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. இந்த விஜய் பேக்டர் மட்டுமின்றி அதிமுக - பாஜக கூட்டணி என்பது பாமகவுக்கு சாதகமாக இருப்பதாக அன்புமணி ராமதாஸ் நம்புகிறார். இதனால் திருப்போரூர் சட்டசபை தொகுதியும் லிஸ்ட்டில் உள்ளது.
சவுமியா அன்புமணி தேர்தலில் களமிறங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் போட்டியிட்டுள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மணி 4 லட்சத்து 32 ஆயிரத்து 667 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். சவுமியா அன்புமணி 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 ஓட்டுகள் பெற்று 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications