சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
சென்னை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதந்தோறும் வரும் பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் சித்ரா பவுர்ணமி எனப்படும் முழு நிலவு இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 527 பேருந்துகளும் மற்றும் 23ஆம் தேதியான நாளை 628 பேருந்துகளும், மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், 23ஆம் தேதியான நாளை 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும், நாளை 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
திருவண்ணாமலையில் இருந்து ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்குஅடையும். அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு அடையும்.
கோடை காலத்தில் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம் - பீஹார் மாநிலம் பாரெளனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.15 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06061) புறப்பட்டு, சனிக்கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு பீஹார் மாநிலம் பாரெளனியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, பாரெளனியில் இருந்து ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06062) புறப்பட்டு, திங்கள்கிழமை இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications