நெருங்கும் தீபாவளி.. சென்னை டூ மங்களூருக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாத இறுதியில் முடிந்துவிட்டது. ஆனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களுக்கு கூடுதல் ரயில் தேவைப்படுவதால் தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து மங்களூருக்கு தற்போது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. 1853ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 13,523 பயணிகள் ரயில்களும், 9,146 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 23 கோடி பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. இருப்பினும் தினமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கூடுதல்கள் ரயில்கள் தேவைப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எதிர் வரும் தீபாவளி பண்டிகைக்காக வழக்கமான ரயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிட்டன. இதனையடுத்து தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் 4 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர பெங்களூருக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கி வெறும் 20 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன. இப்படி இருக்கையில் தற்போது சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி மங்களூருவில் இருந்து அக்.29-ம் தேதி இரவு 7.30 மணிக்கும் (வண்டி எண் 06047), மறுமார்க்கமாக சென்னையில் இருந்து அக்.30-ம் தேதி மதியம் 12.30 மணிக்கும் (வண்டி எண்-06048) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அக்.29ம் தேதி மங்களூரிலிருந்து இரவு 7.30 மணிக்கும் புறப்படும் 06047 சிறப்பு ரயில், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, சோரனூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்னை எழும்பூருக்கு 30ம் தேதி காலை 10.45க்கு வந்து சேர்கிறது.
இதே அக்.30ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு என மங்களூருக்கு 31ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சென்று சேர்கிறது.
அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் வழக்கமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்துதான் புறப்படும். இந்த சிறப்பு ரயில் மட்டும் எழும்பூரிலிருந்து புறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications