சென்னை டூ திருநெல்வேலி.. பக்ரீத் ஸ்பெஷல் ரயில்! முன்பதிவு எப்போது? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: இஸ்லாமியர்களுடைய இனிய ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகையானது, நாடு முழுவதும் வரும் ஜூன் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈத்-உல்-ஜுஹா என்றால் இறைத்தூதர் நபி இப்ராஹின் தியாகத்தை போற்றும் பண்டிகையாகும். இதுதான் ஈகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மாதமான ஜுல் ஹிஜ்ஜாவின் பத்தாவது தினத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (ஜூன் 29) கொண்டாடப்பட இருக்கிறது.

இன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானியாக பலி கொடுப்பார்கள். இப்படி பலி கொடுக்கப்படும் இறைச்சி மூன்று பங்குகளாக பிரிக்கப்படும். இதில் ஒரு பங்கு அக்கம் பக்கம் வீடுகளுக்கும், இரண்டாவது பங்கு ஏழை எளியோருக்கும், மூன்றாவது பங்கு தங்களுக்கும் எடுத்துக்கொள்வார்கள். இந்த பண்டிகையானது மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நாடு முழுவதும் ஸ்பெஷல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் நாளை புறப்படுகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை (ஜூன் 28) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.
மறு மாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications