நாளை சூரசம்ஹாரம்! சென்னை எழும்பூர்- திருச்செந்தூருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: கந்த சஷ்டி விழாவையொட்டி சென்னை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது.
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வுதான் சூரசம்ஹாரம் ஆகும். ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி முதல் பக்தர்கள் கடுமையான மிளகு விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது முதல் நாள் ஒரு மிளகு, 2ஆவது நாள் 2 மிளகு, 3 ஆவது நாள் 3 மிளகு, 4ஆவது நாள் 4 மிளகு, 5ஆவது நாள் 5 மிளகு, 6 ஆவது நாள் 6 மிளகு என இந்த கடுமையான வ விரத்தை பக்தர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.
அதாவது இந்த 6 நாட்களும் மிளகை தவிர வேறு எந்த உணவையும் உண்ண மாட்டார்கள். சூரனை வதம் செய்யும் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நாள் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தற்போது முதலே திருச்செந்தூரில் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவுக்காக சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயிலாக இயக்கப்படும் வண்டி எண் 06007 சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு புறப்படும். இது திருச்சிக்கு இரவு 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06008 திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு ஒரு வழி சிறப்பு அதிவிரைவு ரயிலாக புறப்படும். இந்த ரயில் திருச்சிக்கு மறுநாள் காலை 6 மணிக்கு வந்து 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
இது போல் நெல்லை- தாம்பரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06010) நெல்லையில் இருந்து நாளை இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து அங்கிருந்து 3.50 க்கு புறப்பட்டு காலை 09.55 மணிக்கு தாம்பரம் செல்லும். மறுமார்க்கமாக தாம்பரம்- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 16-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.15 மணிக்கு வந்து 5.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40-க்கு நெல்லை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
