நல்லபாம்பு தந்த இன்ப அதிர்ச்சி.. பூங்கா வரலாற்றில் முதன்முறை! 72 நாட்கள் இன்குபேட்டரில் 5 குட்டிகள்
சென்னை: ஜார்க்கண்ட் வனத்துறை மற்றும் ராஞ்சி பகவான் பிர்சா உயிரியல் பூங்கா நிர்வாகம் இணைந்து அரிய வகை ஊர்வன உயிரினங்களைக் காக்கும் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளன... அந்த வகையில், பூங்கா வரலாற்றிலேயே முதன்முறையாக செயற்கை அடைகாப்பு முறையை பயன்படுத்தி நல்லபாம்பு குட்டிகளை வெற்றிகரமாக பொரிக்க வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளன..!!
இயற்கையின் மகத்தான படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும், ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு.. இதில் ஏதாவது ஒரு சங்கிலி உடைந்தாலும், அது இந்த பூமியின் ஒட்டுமொத்த இயக்கத்தையே நிலைகுலைய செய்துவிடும். அப்படித்தான் இந்த மண்ணில் ஒவ்வொரு உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.. இந்த லிஸ்ட்டில் நாம் அஞ்சி நடுங்கும் பாம்புகளும் அடக்கம்..

அழியும் பாம்புகள் இனம்
உண்மையை சொல்லப்போனால், மனிதகுலத்தின் உணவுப் பாதுகாப்பை மறைமுகமாக காப்பாற்றி வருவது இந்த பாம்புகள்தான்.. விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு அளப்பரியது... ஒருவேளை பாம்புகள் முற்றிலுமாக அழிந்துபோனால், எலிகளின் பெருக்கத்தால் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயமே ஏற்பட்டுவிடும்..
ஆனால் சமீபகாலமாகவே இந்தியாவில் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.. குறிப்பாக, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பாம்புகள் இடும் முட்டைகளை உடும்புகள், முதலைகள் மற்றும் கழுகுகள் போன்றவை வேட்டையாடி சாப்பிட்டு விடுகின்றன.. அதனால் பாம்புகளின் வம்சமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் வனத்துறை
எனவேதான், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும், அழிவின் விளிம்பில் உள்ள ஊர்வன இனங்களை மீட்டெடுக்கவும் வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் ஒரு மகத்தான சாதனை நடந்துள்ளது.. புகழ்பெற்ற பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில், வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத அறிவியல் சாதனை சத்தமேயில்லாமல் நடத்தப்பட்டுள்ளது.. பூங்காவின் வரலாற்றில் முதன்முறையாக, அதிநவீன "செயற்கை அடைகாப்பு" (Artificial Incubation) முறையை பயன்படுத்தி, மிகவும் வீரியமிக்க நச்சுத்தன்மை கொண்ட நல்லபாம்பு (Spectacled Cobra) முட்டைகளில் இருந்து குட்டிகளை அதிகாரிகள் வெற்றிகரமாக பொரிக்க வைத்துள்ளனர்.
7 நல்லபாம்பு முட்டைகள்
சில மாதங்களுக்கு முன்பு பூங்கா வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட 7 நல்லபாம்பு முட்டைகளை வனவிலங்கு மெடிக்கல் டீம், மிகவும் பாதுகாப்பாக சேகரித்தார்கள்.. இயற்கை சூழலில் இந்த முட்டைகள் தப்பி பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்த அதிகாரிகள், அவைகளை செயற்கை அடைகாப்பு பெட்டிக்கு மாற்றினார்கள்.. பூங்காவின் முன்னணி ஊர்வன நிபுணர் விவேகானந்த குமாரின் நேரடி மேற்பார்வையில், குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் துல்லியமாக பராமரிக்கப்பட்டு வந்தன.
ஒவ்வொரு நாளும் முட்டைகளின் நிலை என்னவாகுமோ என்ற பதற்றம் அதிகாரிகளுக்கு இருக்கத்தான் செய்தது.. அதனால்தான் 24 மணி நேரமும் அந்த முட்டைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சரியாக 70 முதல் 72 நாட்கள் வரை இந்த கண்காணிப்பு நீடித்தது.. கடைசியில் அடைகாப்புப் பெட்டிக்குள்ளிருந்த 7 முட்டைகளில் இருந்து 5 நல்லபாம்பு குட்டிகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இந்த பாம்புகள் வெளிவருவதை பார்த்து, பூங்கா நிர்வாகமே சிலிர்த்துப்போனது..
8 மண் உளிப்பாம்புகள்
ராஞ்சி பூங்காவில் செயற்கை அடைகாப்பு முறையில் நல்லபாம்பு முட்டைகள் பொரிக்க வைக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று பூங்காவின் சீனியர் கால்நடை டாக்டர் ஓம் பிரகாஷ் சாஹு நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
இந்த மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த பூங்காவும் திளைத்து கொண்டிருந்தபோதே, இன்னொரு ஹேப்பி நியூஸ் வெளியானது.. அந்த பூங்காவில் 8 மண்ணுளி பாம்பு முட்டைகளும் இதுபோன்ற செயற் அடைகாத்தல் முறையில் பொரிக்கப்பட்டு பாம்பு குஞ்சுகள் வெளிவந்தன.. ஒரே நேரத்தில் 5 நல்லபாம்பு குட்டிகளும், 8 மண் உளிப் பாம்பு குட்டிகளும் பூங்காவில் புதிதாக பிறந்திருப்பது வனத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
பூங்கா வரலாற்றில் சாதனை
இந்த அபார சாதனை குறித்துப் பேசிய பூங்காவின் இயக்குநரும் ஐ.எஃப்.எஸ் அதிகாரியுமான ஜப்பார் சிங், அறிவியல் பூர்வமான திட்டமிடலும், மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த அனுபவம் எதிர்காலத்தில் அழியும் தருவாயில் உள்ள பல அரிய வகை ஊர்வன உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்த குட்டி பாம்புகள் அனைத்துமே ஆரோக்கியமாக உள்ளதாம்.. பூங்காவின் பராமரிப்புப் பிரிவில் இவைகளை வைக்கப்பட்டுள்ளன.. அத்துடன் மருத்துவ குழுவினரால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பகவான் பிர்சா உயிரியல் பூங்கா ஒரு மைல் கல் சாதனையை படைத்துள்ளது, இப்போது நாடு முழுவதும் கவனம் பெற்று வருகிறது..!!


Click it and Unblock the Notifications
