ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!
சென்னை: 2006இல் திமுகவை 'மைனாரிட்டி' அரசு என வசைபாடிய ஜெயலலிதா மெஜாரிட்டி பலத்துடன் 2011இல் ஆட்சியில் வந்து அமர்ந்தார். திமுக 1949இல் உதயமானதில் இருந்து, அதன் அரசியல் வரலாற்றில் 2006 முதல் 2011 வரையான காலகட்டமே அக்கட்சிக்கு மிகப்பெரிய இருண்ட காலமாக இருந்தது எனலாம். அதைத் திறந்த மனதுடன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் ஏற்பர்.
தனிப்பட்ட முறையில் மு.கருணாநிதிக்கு ஒரு இன்பச் செய்தியும் இருந்தது. அவர் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்து பொன்விழா கொண்டாடியதும் இந்த ஆட்சிக் காலத்தில்தான். அதற்காக சட்டசபையில் மே11, 2007 அன்று சிறப்பு அமர்வு கூடியது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் எனப் பல தேசிய தலைவர்கள் பங்கேற்று மு.கவை வாழ்த்தினர். யு.பி.ஏ கூட்டணி யானை பலம் பெற்று ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்த காலம்.
1,77,000 கோடி ஊழல் ?
'இத்தாலி பெண் இந்தியாவை ஆள்வதா?' என பாஜக பற்ற வைத்த நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றி மகிழ்ந்தார் ஜெயலலிதா. அந்த அரசியல் தடைக் கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு, மன்மோகன் சிங்கை பிரதமராக அமரவைத்து காங்கிரசுக்கு மறு உயிர் அளித்திருந்தார் சோனியா.
அவர் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக மாற்றியது திமுக. மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்பு துறைக்கு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது 'இமாலய ஊழல்' புகார் சுமத்தப்பட்டது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் ஆடிட்டர் குருமூர்த்தி, சிஏஜி அளித்த அறிக்கையை வைத்து 177000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அபாயச் சங்கை ஊதினார். இதற்கு எத்தை பூஜ்ஜியம் போடுவது என்றே தெரியவில்லை என்று பத்திரிகைகள் குழம்பியதால் நாடே பற்றிக்கொண்டது. 'இது பொய்யான குற்றச்சாட்டு' எனக் கூறிய ஆ. ராசா, சட்டரீதியாக வாதிட்டு உண்மையை உலகிற்குச் சொல்லுவேன் எனச் சூளுரைத்தார்.
கருணாநிதி சட்டமன்றத்தில் பொன்விழா கொண்டாடிய சுபவேளையில், சி.ஏ.ஜி தன் அமைப்பு தன் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த இரண்டு விழாவும் 'ஸ்பெக்ட்ரம்' ஊழலால் புதைந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை விட்டு ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கின. ஊடகங்கள் கொந்தளித்தன. இறுதியில், 'நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ராசா ராஜினாமா செய்தார்' என மு.கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார். மேலும் அவர், 'ராசா ஒரு தலித் என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்பு; கூச்சல். டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஊழல் புகாரில் ராஜினாமா செய்த அடுத்த நாளே அமைதி நிலவியது ஏன்?' என்று கூறியதைக் கண்டித்து பத்திரிகையாளர் ஞாநி கட்டுரை எழுதினார். 'தலித்' முகமூடிக்குள் ஊழலை மறைக்கப் பார்க்கிறார்கள் எனச் சிலர் கண்டித்தனர்.
இதனிடையே இடைத்தரகர் நீரா ராடியாவின் ரகசிய ஆடியோ கசிந்தது. அது விவகாரத்தின் உஷ்ணத்தை மேலும் உக்கிரமாக்கியது. அதில் கனிமொழியும் சிக்கினார். 2011 மே 21 அன்று கனிமொழி கைதானார். ஆ.ராசா அவரது பதவியை 14.11.2010 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் பற்றி உச்சநீதிமன்றம் 'அவமரியாதையானது' எனக் கண்டித்தது.
மத்தியில் ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்ற பீதி வலுக்கவே, "ஆ. ராசா வெளியேற்றப்பட்டால் கூட்டணி முறிந்து ஆட்சி கவிழும் அபாயத்திற்கு அஞ்சவேண்டாம். அதைத் தவிர்க்க ஆதரவு அளிக்கிறேன்" என்றார் ஜெயலலிதா. வாஜ்பாய் ஆட்சியை இவர் கவித்தபோது திமுக தாங்கிப் பிடித்த அதே உத்தியை ஜெ கையில் எடுத்தார். அதை 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி மீது ஊழல் புகார் அக்கட்சிக்குச் சோகக் கதையாக மாறியது. தமிழ்நாட்டில் டி.ஜி.பி ஆக லத்திகா சரண் நியமனத்தில் விதிமீறல் உள்ளதாக நீதிமன்றம் சென்றது பிரச்சனை. 'பெண்களின் உயர்வை விரும்பாதவர்கள்தான் நீதிமன்றம் சென்றுள்ளனர்' என்றார் கருணாநிதி.
இதனிடையே ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணை தொடங்கியதால், ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ராஜினாமா செய்தது மற்றொரு பின்னடைவு. 6 பிரதமர்களை உருவாக்கிய அரசியல் சாணக்கியர் என்று அடையாளத்தை இழந்து முகம் இழந்து நின்றார் கருணாநிதி. திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இனி எதிர்காலம் உண்டா? என விவாதம் தலைதூக்கியது.
கருணாநிதி வாரிசு யார்?
1996இல் ஜெயலலிதா சிக்கிய அதே ஊழல் பொறியில் திமுக அகப்பட்டது. கூடவே 2007இல் திமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெட்டவெளிச்சமானது. மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான 'தினகரன்' நாளிதழ் அமைச்சர்களின் திறன் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தி, அதைச் செய்தியாக்கியது. முதல் வரிசையில் மாறன் முன்னிலை பெற்றார். 'இந்தக் கணிப்பு தேவையற்றது' எனச் சாடினார் கருணாநிதி.
இந்தப் புயல் அமைதியாவதற்குள் 'கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்?' என்ற கணிப்பை வெளியிட்டது பத்திரிகை. முதல் இடத்தில் ஸ்டாலினும் அடுத்து கனிமொழியும் இருந்தனர். மு.க.அழகிரி ஓரங்கட்டப்பட்டார். கொதித்து எழுந்த அவரது ஆதரவாளர்கள் மதுரை 'தினகரன்' அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்தியதாகச் செய்தி பரவியது. அதில் 3 அப்பாவி ஊழியர்கள் பலியாகினர்.
இந்தச் செயல் திமுகவுக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் மிகப் பெரிய பின்னடைவை உண்டாக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அதிமுக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இதே ஆட்சிக்காலத்தில் கோவையில் மு.கருணாநிதி நடத்திய உலகத் தமிழ்மாநாடு சர்ச்சையில் சிக்கியது. பின் அதை 'செம்மொழி மாநாடு' என்று மாற்றினார் கருணாநிதி. அதில் அவரது வாரிசுகள் முன்னிறுத்தப்பட்டன. நற்பெயரை ஏற்படுத்த வேண்டிய மாநாடு, வரப்போகும் தேர்தலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
இந்நிலையில்தான் சட்டமன்றத்திற்கான தேர்தல் 2011இல் அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டையும் வலிமையாக எதிர்த்து வந்த விஜயகாந்த்தின் தேமுதிக, யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுக கூட்டணிக்குள் சலசலப்புடன் போய் அமர்ந்தார். ஜெயலலிதாவுக்கு அது பெரிய பலமானது. இந்தத் தேர்தலில் மட்டும் அதிமுக, திமுக, பாமக, பாஜக, விசிக, மதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளைக் கடந்து 50 கட்சிகள் களத்திலிருந்தன.
இறுதியாக அதிமுகவுக்கு150 சீட்டுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆர் காலத்தில் கூட சந்திக்காத சரிவை திமுக எதிர்கொண்டது. எதிர்க்கட்சி தகுதியை திமுக இழந்தது. தேமுதிக சார்பில் விஜயகாந்த் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். தேமுதிகவுக்கு 29 இடங்கள் பேரவையில் கிடைத்தன. திமுகவுக்கு 23 இருக்கைகள். சிபிஎம் 10, சிபிஐ 9, பாமக3, புதிய தமிழகம் 2, காங்கிரஸ் 5, பார்வர்ட் பிளாக் 1, மனிதநேய மக்கள் கட்சி 2 என தங்களின் வெற்றியை உறுதி செய்தன. திமுகவை 'மைனாரிட்டி' அரசு என வசைபாடிய ஜெயலலிதா மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் வந்து அமர்ந்தார்.
எழுதியவர்: கடற்கரய்












Click it and Unblock the Notifications