திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பார்க்கணுமா? பக்தர்களுக்கு வந்த குட்நியூஸ்.. சிறப்பு பஸ்கள் ரெடி
சென்னை: நவம்பர் மாதம் 2ம் தேதியான இன்று கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது. இன்று முதல் முருகன் கோவில்களில் விழா களைகட்டும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்தும், பெங்களூரில் இருந்தும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸஅகள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு தான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலையொட்டி திருச்செந்தூர் கோவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 2)ம் தேதி தொடங்க உள்ளது. பக்தர்கள் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து சுவாமியை வழிபாடு செய்ய உள்ளனர். இந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. வழக்கம்போல் அன்றைய தினம் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காண வாய்ப்புள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். திருச்செந்தூரில் நடைபெறுவதையோட்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நவம்பர் 7ம் தேதி (வியாழக்கிழமை) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதியன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதன்பிறகு வரும் 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹாரம் வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் வருகின்ற 6ம் தேதி புதன்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர். ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications