பேசாம போறீங்களா.. இல்ல ஜனநாயகன் படத்தை போடவா! ’ஸ்பைடர் மேன்’ பார்க்கச் சென்றவர்களுக்கு ஷாக்!
சென்னை: ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் 'ஸ்பைடர் மேன்' படம் பார்க்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்னையில் உள்ள பிரபலமான கேசினோ திரையரங்கில் ஸ்பைடர் மேன் படம் பார்க்க சென்ற ரசிகர்களை ஜனநாயகன் படம் பார்க்கச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பணத்தை திரும்ப கேட்டவர்களுக்கு திரும்ப தர முடியாது எனவும், வேண்டுமானால் ஜனநாயகன் படத்தை பார்க்கும்படி சென்னை கேசினோ திரையரங்கம் வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், தனது கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பல மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த 23ஆம் தேதி தமிழகம் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
படம் வெளியான 2 நாட்களில் பல இந்திய நடிகர்களின் படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது ஸ்பைடர் மேன். இதை அடுத்து பிரபல நடிகர்கள் நடித்த படத்தின் ஸ்கிரீன்களின் ஸ்பைடர் மேன் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜனநாயகன் திரைப்படத்தை நிறுத்திவிட்டு ஸ்பைடர் மேன் படத்தை திரையிட தொடங்கியுள்ளனர் தியேட்டர் நிர்வாகத்தினர்.
இந்த நிலையில் தான் சென்னை அண்ணாசாலையில் உள்ள கேஷினோ திரையரங்கில் ஸ்பைடர் மேன் படம் பார்க்க சென்றவர்களை ஜனநாயகன் படம் பார்க்க சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் ஆன்லைன் மூலம் ஸ்பைடர் மேன் படத்தை பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்தனர். காலை 11:30 மணி காட்சிக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் புக் செய்யப்பட்ட நிலையில் டிக்கெட்டில் நேரம் தவறுதலாக போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு ஸ்பைடர் மேன் படத்தை பார்க்க சென்றபோது டிக்கெட்டில் நேரம் தவறுதலாக போடப்பட்டுள்ளதாகவும், இரவு 11:30 மணிக்குத்தான் ஸ்பைடர் மேன் திரைப்படம் திரையிடப்படும் எனவும். காலை 11:30 மணி காட்சிக்கு ஜனநாயகன் திரைப்படம் தான் ஒளிபரப்பப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சினிமா ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் பணத்தை திரும்ப தர வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் உடனடியாக பணம் தர முடியாது வேண்டுமானால் ஜனநாயகம் படத்தை பார்க்கும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications
