புற்றுநோயை மறைத்த பாஸ்கி? கண்டுபிடித்த மனைவி! மனதை உலுக்கும் நிஜ வாழ்க்கை!
சென்னை: காமெடி நடிகர் பாஸ்கி தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்றும் அதிலிருந்து அவரை மீட்டுக் கொண்டு வர தான் என்னவெல்லாம் செய்தேன் என்பது பற்றியும் சில விசயங்களை மனதை உலுக்கும்படி பேசியுள்ளார்.
சின்னதிரையில் எத்தனையோ காமெடி நிகழ்ச்சிகள் வந்துள்ளன. ஆனால், ஒரு காலத்தில் ஜெயா டிவியில் ஹரிகிரிஅசெம்பிளி என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாஸ்கி. அதாவது மொட்டை பாஸ்கி. இவர் ஒரு கிரிக்கெட் வீரரும்கூட. கூடவே நல்ல இசை ரசிகர். இவர் எஸ்.பி.பியை ஒரு பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் வழக்கத்திற்கு மாறாக எஸ்.பி.பியின் கலகலப்பான முகத்தைக் காட்டி இருந்தார் பாஸ்கி. அதேபோலத்தான் இளையராஜாவை எடுத்த பேட்டியையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் உச்சத்திலிருந்தபோது கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கு என ஒரு இடத்தை தக்கவைத்திருந்தார். ஒரு பக்கம் கிரிக்கெட், இன்னொரு பக்கம் இசை, கூடவே காமெடி எனப் பல கலவையாக வெளியுலகத்திற்குக் காட்சி தரும் இந்தக் காமெடி நடிகர் பாஸ்கிக்குள் கண்ணீரை வரவழைக்கக் கூடிய சோகமும் நிரம்பி உள்ளது. ஒரு யூடியூப் தளத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த தகவலைப் பேசி இருக்கிறார்.
அதைக் கேட்கும்போதே சோகம் நம் நெஞ்சைப் பிழிகிறது. அவர் மனைவிக்கு என்ன ஆனது? அவர் மரணம் எப்படி நடந்தது ? இதைப்பற்றி பாஸ்கி பேசுகையில், “என் மனைவிக்குப் புற்றுநோய் இருந்தது யாருக்குமே தெரியாது. வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை. தேவையில்லாமல் அதைச் சொல்லி அவளது சந்தோஷத்தை ஏன் சிதைக்கவேண்டும் என அமைதியாக இருந்தேன். ஆனால், அவளைச் சிகிச்சைக்கு அழைத்துப் போகும் போது சொல்லாமல் போக முடியாது இல்லையா? 'எனக்கு என்ன பிரச்சினை?’ என்பாள். நான் ஏதோ சளி பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று சொல்லிச் சமாளிப்பேன். அவளுக்கு 90% நுரையில் கெட்டுவிட்டது. மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் அவளிடம் சொல்லாமல் மறைத்தேன். வழக்கம் போல் சகஜமாக காமெடியாக பேசி, அவளுக்கு எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக் கொண்டேன். இரவு அவள் தூங்கப்போகும் முன் கலகலப்பாக காமெடியாக பேசுவேன். அவள் மெய்மறந்து சிரித்தபடியே தூங்கிவிடுவாள். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவளுக்கு முடி கொட்ட ஆரம்பித்தது. அவள் உஷாராகிவிட்டாள். அவளுக்கு ஏதோ சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது.
ஒருநாள் திடீரென்று, 'உடம்புக்கு என்ன பிரச்சினை? முடி எல்லாம் கொட்ட ஆரம்பிக்கிறது? என்ன மறைக்கிறீர்களா? எனக்கு கேன்சரா?’ என்று நேடியாகக் கேட்க ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி. கார்டூனிஸ்ட் மதன் தங்கை வசந்தியைதான் நான் கல்யாணம் செய்தேன். 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். கடைசியில் 2 ஆண்டுகள் முன்பாக அவள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டாள்.
எங்கள் வீட்டில் மொத்தம் 25 பேர். வீட்டில் மொத்தம் 14 அறைகள். அத்தனைப் பேரும் கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்தோம். வாடகை வீடுதான். ஆனால் 1930இல் தாத்தா காலத்திலிருந்து வாடகைக்கு இருந்தோம். உரிமையாளர் காலி பண்ணச் சொல்லி வழக்குப் போட்டார். ஒவ்வொருவராகப் பிரிய ஆரம்பித்தார்கள். 14 அறைகள் கொண்ட வீட்டில் வாழ்ந்துவிட்டு, வழக்கில் தோற்றப்போனதால் சிங்கிள் ரூம் உள்ள ஒரு வீட்டுக்கு வாடைக்குப் போய் வந்தோம். வீட்டில் ஒரு ஃபனிர்ச்சரும் கிடையாது. தரையில்தான் உட்கார்ந்திருப்போம். அவ்வளவுதான் வசதி என ஆனது. நான் ஐஒபியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை பார்த்துவந்தேன். அப்போது கிரிக்கெட்டிலிருந்தேன். 5 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
அதன்பின்னர் 2 வருடங்கள் கழித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குத் தேவையான பொருட்களையே வாங்கினோம். அப்படிப் படிப்படியாக வளர்ந்ததுதான் இந்த வாழ்க்கை. என் மனைவி எனக்கு சினிமாவே வராது என்றால். என் காமெடி எடுபடவே செய்யாது என்றார். 'உன்னைவிடப் பெரிய காமெடியன்கள் எல்லாம் இருக்கும்போது உன் காமெடி எடுபடாது’ என்றாள். அவள்தான் என்னுடைய சரியான விமர்சகர்” என்று பல உண்மைகளை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அடுத்து அஜித், விஜய் உடன் நடித்தது தொடர்பாக பாஸ்கி பேசும் போது, “விஜய்யுடன் நான் நடிக்கும்போதே அவர் அரசியல் விசயங்களை ஆர்வமாக இருந்தார். நான் அதைப் பற்றி அவரிடம் பேசி இருக்கிறேன். அவர் தன்னுடன் உள்ள நண்பர்கள் தனது குறைகளை வெளிப்படையாகச் சொல்வார்கள். அதற்காகவே தான் அதிகம் பேச மாட்டேன் என்று முதல் அறிமுகத்திலேயே சொன்னார். அவருடன் முதல் சந்திப்பே மறக்க முடியாது. அவர் இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். நல்லது செய்வார். திடீரென்று ஒரு நாள் முதல்வர் மாதிரி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் நல்லது செய்தால் அவருக்கு ஓட்டுப் போருவேன். ஏன் போடக்கூடாதா என்ன?
அஜித்துடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் மிகத் தன்மையான மனிதர். நான் முதல் சந்திப்பிலேயே 'உங்களை அஜித் என்றுதான் அழைப்பேன். தல என்று சொல்ல மாட்டேன்’ என்றேன். அவர் என்னை முட்டாள் என்று கூப்பிடுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார். அடக்கமான, தன்மையான மனிதர் அவர்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications