ராஜீவ் கொலை வழக்கு: விடுதலையான சாந்தன் ஹேப்பி! பாஸ்போர்ட் கிடைச்சாச்சு-இலங்கை செல்ல மத்திய அரசு ஓகே!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான சாந்தன், இலங்கை செல்வதற்கான தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சாந்தன், இலங்கைக்கு செல்வதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழரான சாந்தனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் 2022-ம் ஆண்டு உச்சநீதிம்ன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

திருச்சி சிறப்பு முகாம்: ஆனால் இலங்கை தமிழர் என்பதால் சாந்தன், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
ரணிலுக்கு கடிதம்: ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.
இலங்கை வர அனுமதியுங்க.. : தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என கோரியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதில், இலங்கையில் முதுமையில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொள்ள திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கொடுத்திருந்தேன். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தம்மை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சாந்தன் கோரியிருந்தார்.
பாஸ்போர்ட் வந்தாச்சு, மத்திய அரசும் ஓகே: இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 32 ஆண்டுகாலம் இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்து, சிறப்பு முகாமில் அடைபட்டு கிடந்த சாந்தன் விரைவில் சொந்த மண்ணான இலங்கை திரும்ப இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான கைதிகளில் வெளிநாடு செல்லும் முதல் நபர் சாந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications