ஸ்ரீரங்கம் கோவிலின் 50 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்ததாக புகார்.. திமுக பிரமுகர் கைது! நடந்தது என்ன?
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் அபகரித்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திமுக நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரங்கநாதர் கோயிலுக்கான 7,515 சதுர அடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ராம்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கு முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி கோயிலுக்கு சொந்தமாக, அரசு மருத்துவமனை அருகே கட்டடத்துடன் கூடிய சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளராக இருக்கும் ராம்குமார் என்பவர் முறைகேடாக அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததாக திருச்சி மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

6 பேர் மீது வழக்கு
இதுமட்டுமில்லாமல் கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவகிறது என்றும் ராம்குமார் மனைவி அப்பகுதியில் வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி இந்த புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக பிரமுகர் ராம்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் மேலும் சிலர் விசாரணை வளையத்திற்குள் வரலாம் எனவும், போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை பாயலாம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் திமுக பிரமுகர் ராம்குமார் மதுரை உயர் நீதிமன்றம் மதுரை கிளையும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டது.
வாகனத்தை வழிமறித்து கைது
இந்நிலையில் ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டதாக ராம்குமாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது போலீசார் வழிமறித்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இது பற்றி அமைச்சர் ரமேஷ் கூறுகையில், இந்த வழக்கில் பலர் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலம் முழுக்க முழுக்க ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலம். எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
