மார்ச் 1ல் பிளஸ் 2, மார்ச் 4ல் பிளஸ் 1, மார்ச் 26ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் -அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு உள்ளார்.

தேர்வுக்காக தயாராகி வரும் மாணவர்களும், அவர்களை தயார்படுத்தி வரும் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் இந்த அட்டவணையை எதிர்பார்த்து காத்து உள்ளார்கள். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தீபாவளி விடுமுறை முடிந்த உடன், பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்." என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் ஜே இ இ, கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார்கள். எனவே அந்த தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், 3 விதமான பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில நாட்களில் அட்டவணை வெளியிடப்பட உள்ளது." என்று கூறி இருந்தார்.
ஏற்கனவே பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை மூலமாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 27 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளார்கள். இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று காலை 9.30 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளார். அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 12 முதல் 17 வரை 12ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 19 முதல் 24 வரை 11 ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும். பிப்ரவரி 23 முதல் 29 வரை 10ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications