அதிமுகவை நிராகரிப்போம்.. புதிய விடியலை நோக்கி பயணிப்போம்.. மு.க.ஸ்டாலின் அழைப்பு #WerejectAdmk
சென்னை: வேலைவாய்ப்பின்மை, ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுவதாலும் அனைத்து தரப்பினரும் அதிமுகவால் பாதிக்கப்படுவதாலும் அதிமுகவை நிராகரிப்போம் என தனது தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று அண்ணா அறிவாலயம் களைக்கட்டியது. முதலில் ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.
இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசினார். பின்னர் அந்த அரங்கில் திமுக தேர்தல் பிரசாரம் குறித்த காணொலி காட்சி காண்பிக்கப்பட்டது.

மாணிக்கம்
அதில் தமிழகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்தும் அதிமுக அரசால் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார் என வயலூரை சேர்ந்த மாணிக்கம் என்பவர் சொல்வதை போன்ற அனிமேஷன் படங்கள் காட்டப்பட்டன.

சாயக்கழிவுகள்
ஆற்றில், கன்மாயில் கலக்கப்படும் சாயக் கழிவுகள் குறித்தும் கிராமங்களில் இதுவரை மருத்துவ வசதி இல்லாதது குறித்தும் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சித்தரிக்கப்பட்டது.

பிரசாரம்
படித்தவர்களை வேலையில்லாமல் திண்டாடவிட்டதாகவும் அரசு அலுவலகங்களுக்கு சென்றாலே கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என இருப்பதாகவும் அரசு கஜானாவை சுரண்டுவதாகவும் காணொலியில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேப்பரை எடுத்தாலே கொலை, கொள்ளை, பலாத்காரம் என வருகிறது. வெளியே செல்லவே அச்சமாக இருக்கிறது என்றும் காணொலியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அனைத்து பிரிவினரும்
சிறிய கிராமங்கள் குறித்து கவலைப்படாத அதிமுக அரசை நிராகரிப்போம் என மக்கள் குற்றப்பத்திரிகையுடன் காணொலி காட்சி இடம்பெற்றிருந்தது. கடைசியில் ஸ்டாலின் பேசுவது போல் இருந்தது. அவர் கூறுகையில் அதிமுக அரசால் இந்த 10 ஆண்டுகளாக அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிமுகவை நிராகரிப்போம்
எனவே ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக செயல்படும் இந்த அதிமுகவை அப்புறப்படுத்த அதிமுகவை நிராகரிப்போம் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மக்களும் www.werejectadmk.com என்ற இணையதளத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் முன்னெடுப்பில் பங்கு கொள்ளுங்கள். புதிய விடியலை நோக்கி நாம் ஒன்றாக பயணிக்கலாம் என ஸ்டாலின் சொல்வது போல் முடிந்தது காணொலி காட்சி.












Click it and Unblock the Notifications