ஓராண்டு ஈராண்டு அல்ல 39 ஆண்டுகள்! குடும்பத்துடன் சென்னையில் ஸ்டாலின் விசிட் அடிக்கும் ஸ்பாட்!
ஸ்டாலின் தனது பிறந்தநாளை காது கேளாத மற்றும் பார்வை திறனற்ற மாணவர்களுடன் கொண்டாடினார்.
சென்னை: சென்னை, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
காது கேளாத மற்றும் பார்வை திறனற்ற மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளிக்கு கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சென்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதனிடையே சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் முதல்வர் ஆற்றிய உரைவருமாறு;

''நான் உரையாற்ற வேண்டும் என்று அறிமுகப்படுத்தி பேசிய சகோதரி அவர்கள், வீரஉரையாற்ற போகிறேன் என்று சொன்னார், ஆனால் நான் வீரஉரையாற்ற வரவில்லை, பாசஉரையாற்ற வந்திருக்கிறேன்.
1984-லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த பள்ளிக்கு உங்களை காண நான் வருவதுண்டு. ஆனால் தொடக்கத்தில் பிறந்தநாள் அன்று வருவேன். இப்பொழுது எல்லாம் பிறந்தநாளுக்கு முதல் நாளே உங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன்.
காரணம், பிறந்தநாள் அன்று வந்தால் நீண்ட நேரம் உங்களிடத்திலே இருந்து உங்களுடைய கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, தொடர்ந்து நீண்ட நேரம் பெற முடியாது, வேகவேகமாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை.
அதனால் தான் முன்கூட்டியே முதல் நாளே வந்து, ஆறஅமர உங்களுடன் உரையாடி, உங்களுடைய அன்பை, வாழ்த்துகளை பொறுமையாக பெற்று செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் முன்கூட்டியே வந்திருக்கின்றேன்.

நான் பல நேரங்களில் சொல்வதாண்டு, ஆண்டிற்கு இரண்டு முறை, மூன்று முறை பிறந்தநாள் வரக்கூடாதா, வந்தால் அடிக்கடி உங்களை வந்து பார்க்கலாமே. அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று நான் பலமுறை ஏங்கியதுண்டு. ஆனால் அப்படி வந்தால் வயது அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
நான், இந்த பள்ளிக்கு பல பொறுப்புகளிலிருந்து வந்திருக்கிறேன். 1984-ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றால், எம்.எல்.ஏ.-வாக வந்திருக்கிறேன், சென்னை மாநகர மேயராக வந்திருக்கிறேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் வந்திருக்கிறேன், எதிர்கட்சி தலைவராகவும் வந்திருக்கிறேன், இன்றைக்கு முதலமைச்சராக வந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் வருவேன், எல்லா ஆண்டும் வருவேன்.''












Click it and Unblock the Notifications