சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்களா? U-Turn அடிக்கும் தவெக அரசின் இன்னொரு முயற்சியா? ஸ்டாலின்
சென்னை: சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயர்கள் இந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகர், நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த பலகையில் முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும் அடுத்து இந்தியிலும் 3ஆவதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் எழுத்துக்கள் இருந்ததை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். இதற்கு பூவுலகின் நண்பர்கள் குழுவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் இந்தியில் ஊர் பெயர்கள் அமைக்கப்பட்ட விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
