2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம்.. முடிவெடுத்த ஸ்டாலின்.. நோ சொன்ன உதயநிதி? ஏன்?
சென்னை: இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது குறித்து திமுகவின் சீனியர்களிடமும் எம்.எல்.ஏ.க்களிடமும் இந்த முடிவை தெரிவித்து கருத்து கேட்டுள்ளார் ஸ்டாலின். இதைக் கேட்ட சீனியர்களும் எம். எல். ஏ. க்களும், தலைமையின் முடிவுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தேர்தல் அட்டவணை
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்குகின்றன:
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தொகுதிகள் காலியானது எப்படி?
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேலும், தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமாவும் வெற்றி பெற்றனர்.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் இந்த இரு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆனால், அதிமுகவில் ஜெயித்த இரு எம். எல். ஏ. க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.
இடைத்தேர்தலில் களம் இறங்க ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. காரணம், தேர்தலில் தோற்று விட்டால், விஜய்யிடம் திமுக தோற்றது என்ற விமர்சனம் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். இதை வைத்தே விஜய்யும் தவெகவினர் கேவலப்படு த்துவார்கள்.
ஸ்டாலினுக்கு விருப்பமில்லை
அதேசமயம், தேர்தலை புறக்கணித்தால், ஓரிரு நாட்கள் விமர்சனம் வரும், பிறகு அது மறைந்து விடும். மேலும், மும்முணை போட்டி நடந்தால் வாக்குகள் பிரிந்து தவெக ஜெயிக்க வாய்ப்புண்டு. இதுவே திமுக புறக்கனித்து விட்டால் தவெகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி உருவாகும் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் யோசித்தே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் ஸ்டாலின்.
தேர்தலை புறக்கணிக்கும் பட்ச்சத்தில், திமுகவின் வாக்குகள் அதிமுகவுக்கு விழும் வகையில் திமுக தலைமை திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது. சீமான் கட்சிக்கு திமுகவினர் வாக்களித்தால், நாம் தமிழர் கட்சிக்கென கட்சி வாக்கு சதவிதம் குறைவு என்பதால், திமுக ஆதரித்தாலும் ஜெயிக்க முடியாது. அதனால், அதிமுகவை ஆதரிக்கும் போது அதன் வாக்கு வங்கியோடு திமுகவின் வாக்குகளும் சேர்ந்தால் தவெகவை தோற்கடிக்க முடியும் என திமுக ஆலோசிக்கிறதாம்.
இப்படிப்பட்ட சூழலில், "அதிமுக ஜெயித்த தொகுதி என்பதால் நாங்கள் புறக்கணிக்கிறோம் " என்கிற காரணத்தை சொல்லி, புறக்கணிப்பதே திமுகவின் முடிவாக இருக்கிறது.
இந்த நிலையில், "தேர்தலில் வெற்றி தோல்வி இயல்பானது தான். களத்திலிருந்து பின்வாங்கினால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும்" என்று தேர்தல் புறக்கணிப்பில் தனக்கு உடன்பாடில்லை என்று தனது கருத்தை ஸ்டாலினிடம் சொல்லியுள்ளாராம் உதயநிதி.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
