விஜய் பேச்சை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஸ்டாலின்.. தேர்தல் களத்தில் தமிழ்நாடு vs என்டிஏ தானாம்!
சென்னை: தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், விஜய்யை முதல்வர் ஸ்டாலின் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏவுக்கும் தான் போட்டி என இன்று விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பேசியுள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் இருக்க, பொதுக்கூட்டங்கள், ஆலோசனை என தேர்தல் களம் பரபரத்து வருகிறது.

திமுக vs தவெக எனப் பேசி வரும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என தொடர்ச்சியாக பேசி வருகிறார். மதுரையில் நடந்த மாநாடு தொடங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளிலும், கட்சிக் கூட்டங்களிலும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே எனப் பேசி வருகிறார் விஜய்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென்மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
ஸ்டாலின் பேச்சு
அப்போது அவர் பேசுகையில், திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்று சொன்னால் அதைவிட பிரம்மாண்டம். நமக்கு மாநாடு என்பது வாரந்தோறும் நடக்கக் கூடியதாக மாறி விட்டது. இந்த மாதத்தில் மட்டும் இன்னும் 5 மாநாடுகள் நடைபெற உள்ளன.
மாநிலங்களின் கூட்டமைப்புத்தான் இந்தியா. போராடி மாநிலத்திற்கு அதிகாரங்களை பெற்றோம். இந்தியாவில் முதலில் மாநில கட்சி ஆட்சியை பிடித்தது திமுக. தற்போது மீண்டும் மாநில அதிகாரங்கள் ஒன்றியத்தில் குவித்துவருகிறார்கள். மாநில கட்சிகள் இருக்கக்கூடாது என பாஜக செயல்படுகிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.
ஏழாவது முறையாக
அடிமைகளும், துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து மாநிலத்தின் சுயமரியாதையை அடகுவைக்க முயற்சிக்கிறார்கள். சுயமரியாதையை விட்டுக்கொடுத்த இயக்கத்தை வீழ்த்த வேண்டும். இனும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்கமுடியாது. நாம் தான் ஏழாவது முறையும் ஆட்சி அமைக்கப்போகிறோம். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
தமிழ்நாடு தான் சூப்பர் ஸ்டார். தமிழ்நாடு தான் சூப்பர் ஸ்டேட். பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரமாக மகளிர் உரிமைத் தொகை, அவர்கள் சுதந்திரமாக பயணம் செய்ய கட்டமில்லா விடியல் பயணம், தோழிகள் விடுதி, புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள், நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி.
பாஜக கிளை செயலாளர் எடப்பாடி
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் இருக்காது. தமிழ்நாட்டுக்கு நிகர் தமிழ்நாடு மட்டும்தான். எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன். பட்ஜெட் என்று வந்து விட்டால், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமில்லை. இந்த முறையாவது எதாவது வரும் என்று நினைத்தால், வழக்கம்போல ஈரத்துண்டு தான். அவர்கள் நமக்கு கொடுத்தது வெறும் ஜீரோ. அப்படியானால் நாமும் அவர்களுக்கு தேர்லில் ஜீரோ தான் கொடுக்க வேண்டும்.
பாஜகவின் கிளைச் செயலாளராக மாறி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தற்போது என்டிஏ பழனிசாமி ஆகி விட்டார். நானும் ரௌடிதான் என்பது போல, நான் தான் கூட்டத்துக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி.
தமிழ்நாடு vs என்டிஏ
நடக்கப் போகிற தேர்தல் தமிழ்நாடு vs என்டிஏ. தோல்வி என்பது பாஜகவிற்கு புதியதல்ல. இதுவரை அடைந்த தோல்வியை விட மிகப்பெரிய தோல்வியை பாஜகவும் அதிமுக அடையப் போகிறது. இதுவரை அடைந்த வெற்றியை விட, மிகப்பெரிய வெற்றியை திமுக அடையப் போகிறது. வளர்ந்த தமிழ்நாட்டை மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நடக்கப் போகிற தேர்தல் தமிழ்நாடு vs என்டிஏ என முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தமாகக் கூறியுள்ளார். தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், விஜய்யை கண்டுகொள்ளாமல் என்.டி.ஏவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் போட்டி என முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications