ஸ்டாலின் பேரை மட்டுமே சொல்லும் விஜய்.. முரசொலியில் அதை பார்த்தீங்களா? தவெக அரசை கவிழ்க்க திமுக மூவ்?
சென்னை: "கடந்த 5 ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு, சனாதனம், பாசிசம் என்று பேசிய திமுக, இப்போது வேறு பாதையில் செல்கிறது. ஏற்கெனவே வாஜ்பாய் ஆட்சியின்போதும், குஜராத் இனப்படுகொலை நடந்த காலத்திலும் திமுக பாஜகவுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறது. மீண்டும் அப்படியொரு சூழல் வரலாம் என்ற புரிதல் கலைஞருக்கு இருந்தது. இன்றைய தலைமைக்கு அந்தப் புரிதல் இல்லை" என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Retroluxe சேனலுக்கு பேட்டி தந்துள்ள மணி, "20 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஒரு வார்த்தை சொல்வார். "திமுகவின் எதிர்ப்பு எவர் ஒருவரையும் வளர்க்கும்." என்பார்.. அப்படித்தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அப்படித்தான் ஜெயலலிதா வளர்ந்தார். இப்போது திமுகவின் எதிர்ப்பு விஜய்யையும் வளர்க்கிறது என்பதுதான் என்னுடைய புரிதல்.

திமுகவின் எதிர்ப்பு
விஜய்யின் அரசியல், நிர்வாகம் மீது ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், இப்போது அது தனிப்பட்ட மனிதர் மீதான விமர்சனமாக மாறியிருக்கிறது. திமுக செய்தித் தொடர்பாளர்கள் முதலமைச்சர் என்ற வார்த்தையைக்கூட தவிர்த்து, விஜய் அண்ணா அல்லது விஜய் ஜோசப், விஜய் என்றுதான் பேசுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய மரியாதையை மறுப்பது தவறான அணுகுமுறை.
டெல்லியில் ராகுல் காந்தி மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். ஆனால், 2019 தேர்தலில் மோடி 303 இடங்களைப் பெற்றார். இன்றைக்கு திமுகவும் விஜயைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறது. இதுபோன்ற அணுகுமுறை விஜய்க்குச் சாதகமாகவே முடியும்.
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி
திமுகவில் ஒரே விஷயத்துக்கு ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என 3 பேரும் அறிக்கை கொடுக்கிறார்கள். கலைஞர் இருந்தபோது எல்லா விஷயங்களுக்கும் அவரே அறிக்கை கொடுக்க மாட்டார். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே எதிர்வினையாற்றுவார். இப்போது 3 பேரும் அறிக்கை கொடுப்பதால் அவர்களுடைய மதிப்பும் குறைகிறது. விஜய் இதுவரை ஸ்டாலினை தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசியதில்லை.
விஜய் அரசை திமுக கவிழ்க்க துடிக்கிறது.. இந்த அரசை கவிழ்க்க 2 கட்சிகளும் முயற்சி செய்கின்றன. ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சில சமரசங்கள செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் கட்சிக்குக் கெட்ட பெயரும் ஏற்படுகிறது.
முரசொலியில் தமிழ்நாடு பாஜக தலைவர்
இப்போது முரசொலியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். முரசொலி திமுகவின் அதிகாரப்பூர்வ குரல். 1942-ல் கலைஞர் அதைத் தொடங்கினார். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது இருந்த 500 கட்சி ஏடுகளையும் ஒன்றிணைத்து முரசொலியை மட்டும் நிலைநிறுத்தினார்.
அப்படிப்பட்ட முரசொலியில் பாஜக தலைவரின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிடுவது சாதாரண விஷயம் கிடையாது. இது திட்டமிட்ட முடிவு. எந்த சமரசத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைத் தொண்டர்களுக்கு மறைமுகமாகக் கடத்துகிறார்கள். நாளைக்கு பாஜகவுடன் சேர வேண்டிய சூழல் வந்தாலும் அதற்குத் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பின்னணி.
திமுக - பாஜக
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு, சனாதனம், பாசிசம் என்று பேசிய திமுக, இப்போது வேறு பாதையில் செல்கிறது. ஏற்கெனவே வாஜ்பாய் ஆட்சியின்போதும், குஜராத் இனப்படுகொலை நடந்த காலத்திலும் திமுக பாஜகவுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறது. மீண்டும் அப்படியொரு சூழல் வரலாம் என்ற புரிதல் கலைஞருக்கு இருந்தது. இன்றைய தலைமைக்கு அந்தப் புரிதல் இல்லை.
எஸ்ஐஆருக்கு எதிராக மற்ற எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியபோது, திமுக அறிக்கைகளோடும் நீதிமன்ற வழக்குகளோடும் நின்றுவிட்டது. தமிழ்நாட்டில்கூட ஸ்டாலின், கனிமொழி அல்லது உதயநிதி தலைமையில் பெரிய போராட்டம் நடத்தவில்லை. இதனால் திமுகவின் பாஜக எதிர்ப்பு அரசியலால் இந்த 6 மாதங்களில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
