கலைஞர் 100 வினாடி வினா போட்டி! மொத்தம் 75 நாட்கள் -10,000 கேள்விகள்! கனிமொழியின் புது முயற்சி!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் ''கலைஞர் 100'' வினாடி வினா, இணையவழி & நேர்முகப் போட்டிகள் போட்டிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
போட்டிகள் (15/09/2023) தொடங்கி, தொடர்ந்து 75 நாட்கள் நடைபெறவிருக்கிறது. வயது வரம்பில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு 18 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நடைபெறும். இன்று (03/09/2023) திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

இன்று (03/09/2023) முதல் (14/09/2023) நாட்களுக்குள் அனைவரும் கலைஞர் வினா விடைக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளக் கொடுக்கப்பட்ட அவகாசமாகக் கூறப்படுகிறது.
கலைஞர் 100 வினாடி வினா காணொலியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை:
''தமிழினத்தின் அறிவொளியாக, தன்னிகரில்லா ஆளுமையாக வாழ்ந்து வழி காட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தை, தமிழ்நாட்டு என்னும் பெருநிலத்தை, தமிழின வரலாற்றை அனைவரும் அறிந்திடும் வண்ணம் நம் கழக துணைப் பொதுச் செயலாளர், என் தங்கை கனிமொழி கருணாநிதி மற்றும் கழக மகளிர் அணியின் முன்னெடுப்பில் 'கலைஞர் 100 - வினாடி வினா' போட்டி நடைபெறவிருக்கிறது.
நமது முந்தைய களப் போராட்டங்களை, நாம் மேற்கொண்ட அரசியல் புரட்சியை, அதற்கு வித்திட்ட நம் முன்னோடிகளை, நாம் அனைவரும் திரும்பிப் பார்க்கவும், நம் அடுத்த தலைமுறையிடம் எடுத்துக்கூறவும், இந்த வினாடி-வினா போட்டி பெரும் திறப்பாக அமையும்.

பத்தாயிரம் கேள்விகளோடு, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த வினாடி வினா போட்டியில், எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம்.
kalaignar100.co.in என்ற இணையத்தளத்தில் வருகிற (15/09/2023) அன்று இணையவழிப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை, இணையில்லா நம் தலைவரின் நூற்றாண்டில் கொண்டாடுவோம். வாருங்கள்.''












Click it and Unblock the Notifications