கனிமொழிக்கு சீனியர் பதவி.. உதயநிதிக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்.. அறிவாலயத்தில் மாறும் காட்சி!
சென்னை: திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். அதேபோல் கனிமொழிக்கு முதன்மை துணைப் பொதுச்செயலாளர் என்ற புதிய பொறுப்பை கொடுக்க ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதன் மூலமாக உதயநிதி ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியின் கட்டுப்பாட்டை எடுக்கும் சூழல் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். அண்மையில் திமுக எம்பி-க்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று இருந்தது.

ஆனால் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதாக திமுகவினர் மத்தியிலும் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதேபோல் கனிமொழிக்கான முக்கியத்துவத்தையும் அளிக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். திமுகவின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது துணை பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தலைமை ஆலோசனை நடத்தி இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் சிலருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்படலாம்.
இதனால் கனிமொழிக்கு முதன்மை துணைப் பொதுச்செயலாளர் என்ற புதிய பொறுப்பை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் துரைமுருகன் பதவியில் இருந்து விலக விரும்பவில்லை. அவரையும் கனிமொழி தரப்பு நெருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே அண்மையில் துரைமுருகனுக்கு நேரில் சென்று கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார். இதனால் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையிலான மோதல் முடிவுக்கு வந்து, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து திமுக தலைமையில் இருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்கள் வெளியாகும் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
