100க்கு 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியாச்சு! திமுக வெற்றிக்கு என்ன காரணம்? ஸ்டாலின் பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அளித்த வாக்குறுதிகளில் 100க்கு 99%ஐ நிறைவேற்றிவிட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல திமுக தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கான காரணத்தையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல மணவிழாவில் பேசும் போது இதனைக் கூறினார். முதல்வரின் உரை வருமாறு;

''திமுக தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சி வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, பணிகளை செய்யப்போகிறோம் என்று வாக்குறுதிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அப்படிப்பட்ட உறுதிமொழிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
இன்னும் சொல்கிறேன், 100-க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படி எத்தனையோ திட்டங்கள் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" மட்டுமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு "விடியல் திட்டம்" என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல், "நான் முதல்வன்" திட்டம்.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" காஞ்சிபுரத்தில், அண்ணா பிறந்த அந்த மண்ணில் அந்தத் திட்டத்தை நான் தான் தொடங்கி வைக்கப் போகிறேன். அப்படி தொடங்கிவைக்கப்படுகின்ற நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்டு அந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.
எவ்வளவு பேர் அந்தத் தொகையை பெற இருக்கிறார்கள் என்று சொன்னால், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் அந்தத் தொகையை வழங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறோம்.''












Click it and Unblock the Notifications