எனக்கு காய்ச்சல் -தொண்டை வலி! அதிகம் பேசக்கூடாதுன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க! வருந்திய ஸ்டாலின்
சென்னை: தனக்கு திடீரென்று காய்ச்சலும் - தொண்டை வலியும் ஏற்பட்டுவிட்ட காரணத்தால் சென்னை மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டத்துக்கு நேரில் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
காணொலி காட்சி மூலம் மிகவும் சோர்ந்தவாறு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும் தன்னை தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன் எனவும் தன்னை அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் மெல்லிய குரலில் காணொலி மூலம் ஸ்டாலின் பேசியதாவது;

''உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். கழகத்துக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். அதை வைத்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று அமைச்சர்களிடமும், மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உத்தரவாகவே நான் சொல்லியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த - செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க.!இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.''












Click it and Unblock the Notifications