தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவை காக்க வேண்டிய கடமையும் திமுக தோளில் இருக்கு! -ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவை காக்க வேண்டிய கடமையும் திமுக தோளில் தான் இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது;
''தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.''

''நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.''
''நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. ''
''எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!''












Click it and Unblock the Notifications