இந்தியா -சீனா போர்! நேருவுக்கு துணை நின்ற அண்ணா! இனப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிக்க திமுக! -ஸ்டாலின்
சென்னை: 1962-ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதை எதிர்கொள்வதில் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அண்ணா துணை நின்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
மேலும், மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் திமுகவினர் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுதந்திர தின விழா உரையில் முதல்வர் பேசியதாவது;

''நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம்.
1962-ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதை எதிர்கொள்வதில் பண்டித நேரு அவர்களுக்குத் துணை நின்றார்கள்.
1971-ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, இந்திய மாநிலங்கள் எல்லாம் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி, இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் அளித்தபோது, அதில் தமிழ்நாட்டின் பங்காக ஆறு கோடி ரூபாய் அளித்தது கலைஞரின் அரசு.
1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணையாக மொத்தம் 50 கோடி ரூபாயை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர்.
இன்றைய திராவிட மாடல் அரசும், நம் நாட்டுத் தியாகிகளை மதித்துப் போற்றி வருகிறது. இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். அதற்கான நினைவுத்தூண் நேப்பியர் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதேபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது நமது அரசு. விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.''












Click it and Unblock the Notifications