பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு! ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? -ஸ்டாலின்
சென்னை: இடைக்கால பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கருப்புச் சின்னம் அணிந்து திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''நாட்டில் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 இலட்சம் கோடி ரூபாயினை ஒன்றிய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவதற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.
மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ("four major castes") என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.
2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.
தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications