அதிகார வரம்பை புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை! ஆளுநர் ரவிக்கு ஸ்டாலின் பாடம்!
சென்னை: நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய அதிகார வரம்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய அதிகார வரம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
உங்களில் ஒருவன் என்ற கேள்வி பதில் நிகழ்வு மூலம் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
முதல்வரிடத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு;

ஆளுநருக்கு பாடம்
கேள்வி: நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு கவர்னரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமிருக்காது.
அதுமட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம்.சட்டமன்றத்திலேயே இது பற்றி நான் சொல்லி இருக்கிறேன்....நிதி நிலைமை சரியாக இருந்தால் - ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு சரியாக இருந்திருந்தால் - இன்னும் பல திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும் என்று நான் சொன்னேன்.
என்னைப் பொறுத்தவரையில் - இது போன்ற நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டு இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பதுதான் என்னுடைய பாணி.

பொறுத்துக்கொள்ளவும்
கேள்வி: தமிழ்நாடு முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும்? மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் அனைத்தும் முழுமையாக எப்போது முடியும்?
பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியில எதுவும் செய்யப்படவில்லை. அதுனால்தான் இந்த நிலைமை காணப்படுகிறது.2021 மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டோம். இரண்டாவது அலையில் இருந்து மீண்ட தருணத்தில், கடுமையான மழையை எதிர்கொண்டோம். அப்போது, ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியதால், பொதுமக்கள், கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
நகரின் அனைத்துப் பகுதியிலும் இந்தப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நான் நன்றாகவே அறிவேன். ஆனாலும், இந்தச் சிரமங்களை சிறிது காலம் சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிறிது காலச் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டால், நெடுங்கால நன்மை காத்திருக்கிறது. அதாவது, இனி சென்னையில் எப்போதுமே கனமழை காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மட்டுமில்லாம, தமிழ்நாடு முழுமைக்கும் இதேபோல மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில், வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக, சென்னையில மட்டும் 4560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நானே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன். மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன். விரைந்து செயல்படுவோம்!

உதயநிதிக்கு பாராட்டு
கேள்வி: திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டதா நீங்க நினைக்கிறீங்களா?
இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி நடத்துகிற திராவிட பயிற்சிப் பாசறைக் கூட்டங்களையும் -தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா நடத்திய திராவிட மாதம் கூட்டங்களையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இளைஞரணி சார்பாக, திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 187 தொகுதிகளில் இதுவரை நடந்திருக்கிறது. மீதமிருக்கும் பகுதிகளிலும் அடுத்தடுத்து நடத்தப்பட இருக்கிறது.

பாஜகவுடன் சமரசமா
கேள்வி: பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசமாகப் போய்விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?
இப்படிச் சொல்லுவதை பா.ஜ.க.வே ஏற்றுக்கொள்ளாது!












Click it and Unblock the Notifications