அமைகிறது இளம் அமைச்சரவை...உதயநிதிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, முதல்வர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் ஸ்டாலின்.
கொரோனா பரவல் காரணமாக மே 7 ம் தேதி கவர்னர் மாளிகையில் மிக குறைவான அமைச்சரவை உறுப்பினர்களுடன், எளிய முறையில் பதவியேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். இதற்காக மே 4 ம் தேதி மாலை 6 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவையில் உதயநிதி
கருணாநிதியின் வழியை பின்பற்றி, புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் அதிக அளவில் இளைஞர்களை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக.,விற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளாக கூறப்படுகிறது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 16,000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அவருக்கு அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அமைச்சர் பதவி
தற்போது அமைக்கப்பட உள்ள அமைச்சரவையிலோ அல்லது அடுத்து மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையிலோ உதயநிதிக்கு பதவி கொடுக்க உள்ளார்களாம். குறைந்தது ஓராண்டிற்குள் உதயநிதி அமைச்சர் ஆவார் என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் பலமான எம்எல்ஏ.,வாக உதயநிதி இருப்பார் என கருதப்படுகிறது.

துணை முதல்வராகவும் வாய்ப்பு
தொடர்ந்து உதயநிதிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, கட்சிக்குள் அவருக்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் துணை முதல்வர் பதவி கூட வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் துவக்கத்திலேயே அமைச்சர் பதவி கொடுத்தால் வாரிசு அரசியல் என்ற பெயர் நிலைத்து விடும் என்பதால், மே 7 ம் தேதி பதவியேற்கும் அமைச்சரவை பட்டியலில் உதயநிதி பெயரை சேர்க்க திமுக தலைமை தயக்கம் காட்டி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஆரோக்கியமான அரசியல்
இன்று காலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்த எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினும், சிறப்பான ஆட்சிக்கு உங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறுங்கள் என தெரிவித்துள்ளார். இது ஆரோக்கியமான அரசியல் நிலையாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications