ஸ்டார் 3.0 குளறுபடி.. ஸ்தம்பித்த தமிழக பதிவுத்துறை.. ஷாக்கில் ரியல் எஸ்டேட் உலகம்! ஹென்றி ஆவேசம்
சென்னை: தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் மயமாக்கல் என்ற உயரிய நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டார் 3.0' (STAR 3.0) மென்பொருள், தற்போது நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அரசுத் தரப்பில் பொதுமக்களின் வசதிக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், நடைமுறைச் சிக்கல்களால் பதிவுப் பணிகள் தேக்கமடைந்துள்ளதை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாடு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள STAR 3.0 (ஸ்டார் 3.0) மென்பொருள் நடைமுறையில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் நிலவி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தமிழக பதிவுத்துறை
மேலும் இதுகுறித்து, FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி, பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இச்சிக்கல்களை உடனடியாக தீர்க்கவும், தமிழகம் முழுவதும் பயிற்சி முகாம்கள் நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "தமிழக அரசின் டிஜிட்டல் முன்னேற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, Registration Act, 1908, Information Technology Act, 2000 மற்றும் தமிழ்நாடு பதிவு விதிகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில் ஸ்டார் 3.0 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. "Sprint 1" கட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, "எங்கிருந்தும் - எந்நேரத்திலும் பதிவு" செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள்
ஆனால், இத்திட்டம் நடைமுறையில் பல்வேறு குறைபாடுகளால் தனது முழுப் பயனை அடைய முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மென்பொருள் பயன்பாட்டிற்கான தெளிவான வழிகாட்டுதல் இல்லாமை, சார்பதிவாளர் அலுவலக பணியாளர்களுக்கு போதிய தொழில்நுட்ப பயிற்சி இல்லாதது, மென்பொருள் மந்தமாக இயங்குவது போன்ற காரணங்களால் ஆவணப் பதிவு பணிகள் காலதாமதம் அடைந்து வருகின்றன.
இதன் விளைவாக, பொதுமக்கள் நேர விரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழிப்புணர்வு காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தாலும், நேரடி பயிற்சி இல்லாததால் பொதுமக்களும், கட்டுமானர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்களும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டார் 3.0 மென்பொருள்
இந்த நிலையில், ஸ்டார் 3.0 மென்பொருளில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரிசெய்து, பதிவுத்துறை அலுவலர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதுடன், மாவட்டம் வாரியாக பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், உதவி மையம் (Help Desk) அமைத்து உடனடி தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும், தமிழில் எளிய வழிகாட்டி வெளியிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மாற்றம் பொதுமக்களுக்கு எளிமையான சேவையை வழங்குவதற்கான முக்கிய முன்னேற்றமாக இருந்தாலும், அதனை செயல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் டாக்டர் ஹென்றி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications