Kamal Haasan: ஸ்டார்லிங் பஞ்சாயத்து.. இந்தியா மீது ஆதங்கத்தை கொட்டிய எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி
சென்னை: 'ஸ்டார்லிங்க்' சேவைக்கு அனுமதி அளிக்குமாறு எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக இந்தியாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இணையச் சேவைக்கான அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானி மீது எலான் மாஸ்க் கடும் விமர்சனங்களை வைத்த நிலையில், அவருக்கு நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
உலக பெரும் பணக்காரான எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். "எனது ஸ்டார்லிங்க் நிறுவனம் 165 நாடுகளில் உரிமம் பெற்று இயங்கி வருகிறது.

எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி
இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையிலும் இன்னும் உரிமம் கிடைக்கவில்லை. அம்பானி தான் இந்தியாவின் உண்மையான பாஸா" என்று பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்கின் இந்த பதிவு, நேரடியாக இந்திய தொழிலதிபர்களை விமர்சிப்பதாக இருந்தது. எலான் மஸ்க்கின் இந்த எக்ஸ் பதிவு குறித்து நடிகரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியராக இருந்தாலும் சரி.. அமெரிக்கராக இருந்தாலும் சரி.. எந்த ஒரு கோடீஸ்வரரும் நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கக் கூடாது. செயற்கைக்கோள் இணையச் சேவையில் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை நாம் வரவேற்க வேண்டும்.
மலிவு விலையில் கிடைக்க வேண்டும்
அதேநேரத்தில், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற, குறைந்த செலவிலான இணைய இணைப்பை யார் வழங்குகிறார்களோ, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் இணையச் சேவையும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அதிக சந்தா கட்டணமும், உபகரணங்களுக்கான அதிக விலையும் சாதாரண மக்களுக்கு இந்தச் சேவையை எட்டாக்கனியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது.
இணைய இணைப்பு என்பது டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வேண்டுமே தவிர புதியதொரு டிஜிட்டல் இடைவெளியை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. இந்தியாவைப் பொறுத்தவரை, தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவைகள் வெறும் வணிகச் சொத்துகள் மட்டுமல்ல, அவை நாட்டின் பாதுகாப்பு சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புகள் ஆகும்.
நமக்குள்ளேயே விவாதிப்போம்
எனவே, தேசியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கட்டுப்பாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் எந்த சமரசமும் கிடையாது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு கொள்கைகளை பின்பற்றிக்கொண்டு, மற்ற நாடுகளுக்கு தடையற்ற சந்தைப் பொருளாதாரம் குறித்து அறிவுரை கூற முடியாது.
தங்கள் நாட்டின் உள்நாட்டு வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பதற்காக சீன மின்சார வாகனங்கள் மீது அமெரிக்கா 100 சதவீத இறக்குமதி வரியை விதித்து இருக்கிறது. இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஜனநாயக நாடான இந்தியாவில் நமது பலம் மற்றும் குறைபாடுகள் குறித்து நாட்டு மக்களாகிய நாம் நமக்குள்ளேயே விவாதிப்போம். கேள்வி எழுப்புவோம். அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
இந்திய மக்கள் தான் முடிவு எடுக்கனும்
பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.39,888 கோடி செலவிடப்பட்ட போதிலும், கிராமப் பஞ்சாயத்துகளில் வெறும் 33.2 சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் இருப்பது பற்றி நாம் கேள்வி எழுப்புவோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, காலனி நாடு அல்ல. உலக நாடுகளை நாம் வரவேற்கிறோம். ஆனால், இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் இந்திய மக்களாகத்தான் இருக்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளின் சுயநல நோக்கங்களோ, இரட்டை நிலைப்பாடுகளோ அல்லது இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி, எந்த ஒரு கோடீஸ்வரரோ நமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது" என்று காட்டமாக எலான் மஸ்க்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.




Click it and Unblock the Notifications
