ஐஸ்வர்யாவின் நகைகளை திருடி வீடு வாங்கி வாடகைக்கு விட்ட பணிப்பெண்..போலீஸ் விசாரணையில் அம்பலம்
சென்னை: ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து நம்பிக்கைக்கு உரியவராக மாறி நகைகளை திருடி
நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார் பணிப்பெண். அந்த வீட்டினை வாடகைக்கும் விட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மாயமானது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
இதனையடுத்து ஈஸ்வரி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவருக்கு கணவரும், 3 மகள்களும் உள்ளனர். வங்கி வாயிலாக பணபரிமாற்றம் செய்த ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

வேலைக்கு சேர்ந்த பெண்
வேலைக்கார பெண் ஈஸ்வரி நகைகளை எப்படி திருடினார் என்பது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈஸ்வரி சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர். அவரது கணவர் பெயர் அங்கமுத்து. கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு சேர்ந்தார். நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகி விட்டார்.

லாக்கர் சாவி
நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரியும் அளவுக்கு, ஈஸ்வரி நம்பிக்கைக்குரியவராக நடந்து கொண்டார். அதன்பின்னர் சிறுக சிறுக நகைகளை திருடி சேர்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார் ஈஸ்வரி. அதில் 2 மாடிகளுடன் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.

வாடகைக்கு விட்ட ஈஸ்வரி
ஈஸ்வரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவே, நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 100 சவரன் நகைகள், 30 கிராம் வைர நகைகள், வெள்ளிப்பொருட்களை மைலாப்பூரில் உள்ள நகைக்கடையில்தான் அவர் விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வைத்து வீடு கட்டிய ஈஸ்வரி அந்த வீட்டினை தற்போது இரண்டு பேருக்கு வாடகைக்கு விட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலம், வீடு
வங்கிக் கடனை அடைக்க மாதம் தோறும் ஐஸ்வர்யாவின் நகை லாக்கர் பெட்டியில் இருந்து திருட ஆரம்பித்தார். திருடிய நகைகளை நகைக்கடையில் விற்று அதில் வந்த பணத்தில் நிலம் வாங்க வாங்கிய கடனை கட்டி உள்ளார். இரண்டே ஆண்டுகளில் கடனை அடைத்து விட்டு பின்னர் வேலையில் இருந்து நின்று விட்டார். நிலம் வாங்க வாங்கிய கடனை அடைக்க பணம் கட்டிய விவரங்களை வங்கியில் இருந்து பெற்று, அதன் மூலம் தான் நகை திருடிய விவரத்தை கண்டுபிடித்து விட்டோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வங்கி பண பரிவர்த்தனை
ஈஸ்வரியை முறையாக விசாரிக்க ரஜினி குடும்பத்தில் உரிய ஆதரவு இல்லை என்று கூறிய காவல்துறையினர், நகை திருட்டு போன விசயமும் வெளியில் சொல்ல முடியாமலும், மிகவும் இக்கட்டான நிலையில் வழக்கை விசாரித்தோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கவில்லை. எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் வைத்துதான் விசாரணை நடத்தினோம் என்றும் காவல்துறையினர் கூறினர்.

டிரைவர் கைது
இதற்கிடையே வேலைக்கார பெண் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர் நடிகர் ரஜினிகாந்த்திடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications