இரு மொழியை பயிலவே கஷ்டம்... மும்மொழியை எப்படி பயில்வார்கள்... கே.எஸ் அழகிரி பேச்சு
சென்னை: நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகிற நிலையில் மும்மொழியை எப்படி பயில்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஏற்கும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்பதே காங்கிரஸின் கொள்கை என்று தெரிவித்தார்.

மேலும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.
புதிய கல்வி கொள்கையின் வரைவுஅறிக்கையின்படி 6ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்திமொழி திணிப்பை நீண்டகாலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு உண்டு.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 10, பிளஸ் 2 திட்டத்தை மாற்றி அமைப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரை இந்தி பேசாத மக்களுக்கு நேரு வழங்கிய உறுதிமொழி தொடர்ந்து காப்பாற்றப்படவேண்டும். இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பாஜ அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியது வரும் என்றார்.
முன்னதாக, எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்படவேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் பிரதமர் நேரு கூறியதை சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி திணிப்பு என்று ஒவ்வொன்றாக தமிழ் நாட்டில் நுழைக்க முயற்சி செய்கிறது என்றும் அந்த ஆபத்தை தடுக்கும் சக்தி தி.மு.க. கூட்டணிக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications