கேந்திரிய வித்யாலயா முதல்வர் பதவி! 957 பேரில் 1 தமிழர் கூட இல்லை! அநியாயம்! வெளுக்கும் வெங்கடேசன்!
சென்னை: கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் பதவிகளுக்கான நேரடி நியமன தேர்வில், ஒரு தமிழர் கூட செலக்ட் செய்யப்படாதது அநீதியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.
மேலும், கேந்திரிய வித்யாலயா நேரடி நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. விடுத்துள்ள பதிவு வருமாறு;

கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி, அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது.
தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை, "மெரிட்" எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி. எஸ்.டி என்ற விவரங்கள் இல்லை.
"மெரிட்" டில் வரக் கூடிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.
பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமூகத்தில் உள்ளது தூரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது.

முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 ''மீனா'' க்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் (UR) தேர்வர்களில் ஒரு "மீனா" கூட இல்லை. இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்கதன் தெரிவிக்க வேண்டும்.
ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளேன்.












Click it and Unblock the Notifications