சென்னை பீச் டூ செங்கல்பட்டு! மின்சார ரயில்கள் நாளை ரத்து.. சிறப்பு ரயில் மட்டும்தான்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்ட்ரல் ஆவடி, வேளச்சேரி, பீச் - தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரூட்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்கள், சென்னையின் அத்தியாவசிய பயண தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

புறநகரில் இருந்து சென்னை சிட்டிக்குள் வரும் பயணிகள் பெரும்பாலானோர் மின்சார ரயில்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை ரயில்கள் சில நிமிடம் தாமதம் ஆனாலும் கூட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
ரயில் நிலையங்களில் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பீக் நேரங்களில் சராசரியாக 10 நிமிட இடைவெளிக்கு உள்ளாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் வரும் ரயில்களில் எல்லாம் கூட்டம் அலைமோதும். இப்படி மிக முக்கிய வழித்தடமாக சென்னை புறநகர் ரயில்கள் உள்ள நிலையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தான், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் நாளை மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணியில் இருந்து 20 நிமிட இடைவெளியில் 23 சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும். இதேபோல சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் அதாவது செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு தாம்பரம் வழியாக காலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு காலை 3.55 மணியில் இருந்து அரை மணி நேர இடைவெளியில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications