சின்னம் பறிபோனால் சீமானுக்குச் சிக்கலா? கட்சிக்கு வீழ்ச்சியா?
சென்னை: சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தை முடக்க முடியுமா? அதனால் அவரது கட்சிக்கு என்ன நஷ்டம் ஏற்படும்?
வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்துத் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது.

வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்குத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சீமான் கட்சிக்கு ஒதுக்கி உள்ள கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி, இந்தமுறை தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அக்கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
தேசியக் கட்சியாக ஒரு பொதுச் சின்னத்தைப் பெற வேண்டும் என்றால், அக்கட்சி குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் தேசிய கட்சியாக ஒரு பொதுச் சின்னத்தைப் பெற முடியும்.
ஆனால், நாம் தமிழர் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காகவே ஆளும் கட்சி மறைமுகமாகச் சின்னத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது என நாதகவை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால், நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி கர்நாடகாவில் மட்டும் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இருப்பதாகவே தெரிகிறது. இந்தியா முழுவதும் அக்கட்சிக்கு அச்சின்னம் இன்னும் வழங்கப்படவில்லை. திமுகவின் உதயசூரியன் சின்னம்கூட வேறு மாநிலத்தில் இன்னொரு கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு காலத்தில் உதயசூரியனே சுயேச்சை சின்னமாகவே இருந்தது. திமுக அச்சின்னத்தில் நின்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், தமிழ்நாட்டில் மட்டும் உதயசூரியன் திமுகவின் நிரந்தரமான அடையாளமாக மாறியது.
அதைப்போல இரட்டை இலை சின்னம் கேரளாவில் உள்ள ஒரு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதே சின்னம் தான் அதிமுகவுக்கு உள்ளது. சைக்கிள் சின்னம் தெலுங்கு தேசத்திற்கு இருந்தது. இங்கே அதே சின்னம் தமாகாவுக்கு முன்பு இருந்தது.
இப்படி ஒரே சின்னம் பல மாநிலங்களில் வேறு கட்சிகளுக்கு இருக்கலாம். ஒரு கட்சி மாநிலக் கட்சியாக வளர்ந்து இந்தியா முழுவதும் பிறகு தேசிய கட்சியாகப் போட்டியிடும்போது வேண்டுமானால் அந்தச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் பறிக்கக் கூடும்.
அப்படித்தான் முன்பு யானை சின்னம் பாமகவுக்கு இருந்தது. மாயாவதியின் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக மாறிய போது பாமகவின் யானை சின்னம் பறிபோனது.
அதன்பின்னர் மாம்பழம் சின்னத்தை டாக்டர் ராமதாஸ் பெற்றார். அப்போது முதல் பாமகவின் சின்னமாக மாம்பழம் சின்னம் இருந்து வருகிறது.
அதைப்போலத்தான் மதிமுகவுக்குக் குடை சின்னம் முன்பு இருந்தது. பிறகு அது பறிபோனது. அதனால் பம்பரம் சின்னம் பெற்றார்கள். அதன்பின் அங்கீகாரம் பெற்றதால் அதே சின்னம் இப்போதும் தொடர்கிறது.
இப்படியான சின்னம் பறிப்பு என்பதுகூட 8% வாக்குகளை ஒரு கட்சி தாண்டி விட்டால், பிறகு அதையும்கூட பறிக்க முடியாது. விவசாயி சின்னம் பெற்ற தேசிய கட்சி இப்போதைக்கு எங்கும் இல்லை.
ஆக, மாநிலக் கட்சியான சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிக்கப்படும் என்பதற்கு முகாந்திரம் இல்லை.
இந்தச் சின்னத்தை இழப்பதால் சீமானுக்கு என்ன நஷ்டம் வரும்? அது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளை முன்வைத்துள்ளார். சின்னத்தை இழப்பதால் சீமான் கட்சி முடங்கிவிடுமா?
"சின்னம் விஷயத்தில் சீமானுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்ச்சை அரசியல் ரீதியாக லாபம்தான். அதேபோல் புதிய சின்னம் கிடைத்தாலும் அவருக்கு லாபம்தான்.
முன்பு சீமானுக்கு மெழுகுவர்த்தி சின்னம் தான் இருந்தது. கிறிஸ்துவர் என்பதால்தான் மெழுகுவர்த்தி சின்னத்தை வாங்கி உள்ளார் என சில அதை விமர்சித்தனர்.
சீமான் கட்சியைப் பொறுத்தளவில் சீமான் தான் அந்தக் கட்சியின் சின்னம்.

அதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறேன். ஜெயலலிதா உயிரோடு உள்ள போது அதிமுக இரட்டை இலையை எதிர்த்து 1.1% வாக்குகளைத்தான் சீமான் பெற்றார். அதன்பின்னர் அவர் மறைந்த பிறகு இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரையும் எதிர்த்து 3.8% வாக்குகளைப் பெற்றார். திரும்பவும் இரட்டை இலையைப் பலவீனப்படுத்தி 6.8% வாக்குகளைப் பெற்றார்.
ஒருமுறை செந்தில் பாலாஜி சீமானை 5% வாக்குகளுக்கு மேல் எடுக்க விடமாட்டேன் என்றார். அதையும் மீறி சீமான் 6.3% வாக்குகளைப் பெற்றார்.
38% வாக்குகளைப் பெற்றிருந்த அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்குகளைத்தான் பெற்றது. பணம் கொடுத்தும் அதிமுக 13% வாக்குகளை இழந்துவிட்டது. பணமே கொடுக்காத சீமான் உள்ளாட்சித் தேர்தலில் 1% வாக்குகளைத்தான் பெற்றார்.
ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் 6.3% வாக்குகளைப் பெற்றார். ஆகவே சீமான் கட்சியில் சின்னம் முக்கியமில்லை. அவரது பிரச்சாரம் முக்கியம். அதைப் பார்த்துத்தான் ஓட்டுப் போடுகிறார்கள்” என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.












Click it and Unblock the Notifications