மகளுக்காக மாதம் ரூ.12,500.. 21 ஆண்டுகளில் ரூ.69 லட்சம் கிடைக்குமா? செல்வமகள் திட்டக் கணக்கு
சென்னை: பெண் குழந்தைகளின் படிப்பு, திருமணம் என எதிர்காலத் தேவைகளுக்காக பெற்றோர் இப்போதே பணம் சேர்க்க தொடங்கினால், பின்னாளில் பெரிய தொகையை உருவாக்க முடியும். இதுக்காகவே அஞ்சல் துறையில் ஒரு ஸ்பெஷலான சேமிப்பு திட்டம் இருக்கிறது. இதில் மாதம் ரூ.12500 சேமித்தால், 21 ஆண்டுகளில் சுமார் ரூ.69 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தில் 15 வருடங்கள் மட்டுமே பணம் செலுத்தினால் போதும் என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான் சுகன்யா சம்ருத்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம். அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இந்த கணக்கை தொடங்கலாம்.

மாதம் ரூ.12500 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதை மாதக் கணக்கில் பிரித்தால் ரூ.12,500 ஆகும்.. இப்படி மாதம் ரூ.12,500 வீதம் 15 ஆண்டுகள் பணம் செலுத்தினால், உங்கள் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும்.
இப்போது இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதே வட்டி விகிதம் தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கும் மாறாமல் இருந்தால், மாதந்தோறும் ரூ.12,500 செலுத்தும் கணக்கில் சுமார் ரூ.69.3 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் சுமார் ரூ.46.8 லட்சம் வட்டியாக கிடைக்கும்.
இது ஒரு தோராயமான கணக்கீடு மட்டுமே. உண்மையில் கிடைக்கும் தொகை ஒவ்வொரு காலாண்டிலும் அரசு அறிவிக்கும் வட்டி விகிதம், பணம் செலுத்தும் தேதி போன்றவற்றை பொறுத்து மாறும்.
யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?
பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது நிறைவடைவதற்கு முன்பு இந்த கணக்கை தொடங்கலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை தொடங்க முடியும்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். முதல் அல்லது இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்திருந்தால், உரிய சான்றிதழ்களுடன் விதிவிலக்கின் கீழ் கூடுதல் கணக்குகளை தொடங்கலாம்.
எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். இதற்கு இடைப்பட்ட தொகையை பெற்றோர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
முக்கியமாக, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மாதம், காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என வசதிக்கு ஏற்ப பணம் செலுத்தலாம். ஆனால், ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும்.
15 ஆண்டுகள் பணம் செலுத்தினால் போதும்!
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு புதிதாகப் பணம் செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 21 ஆண்டுகள் முடிந்த பிறகுதான் முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ள முடியும். அதாவது, கடைசி 6 ஆண்டுகள் பணம் செலுத்தாமல் கணக்கில் உள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும்.
தற்போதைய வட்டி விகிதம் 8.2%
அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது... இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் மறுபரிசீலனை செய்கிறது. அதனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் வட்டி விகிதம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன தெரியும்? வட்டிக்கு கூட்டு வட்டி கிடைப்பதுதான். ஒவ்வொரு வருடமும் கணக்கில் சேரும் வட்டிக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி கிடைக்கும். இதனால் நீண்ட காலத்தில் சேமிப்புத் தொகை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பாதித்தொகை எடுக்கலாமா
பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததுமே அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, இவற்றில் எது முதலில் நடக்கிறதோ அதற்கு பிறகு உயர்கல்விக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்காக கல்லூரி சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் அல்லது கல்விக் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி செலவுக்கு தேவையான தொகைக்கு உட்பட்டு, விதிகளின்படி தவணைகளிலும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
திருமண வயது சான்று
பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு திருமணம் நடைபெற இருந்தால், கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொண்டு முழுத்தொகையையும் பெறலாம். இதற்காக திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த 3 மாதங்களுக்குள்ளோ விண்ணப்பிக்க வேண்டும். திருமண வயதுக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், பழைய வருமான வரி முறையில் விதிகளுக்கு உட்பட்டு வரிச் சலுகை பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
எப்படி கணக்கு தொடங்குவது?
அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கு சென்று செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதற்கு பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள ஆவணங்கள் உள்ளிட்டவை தேவைப்படும்.
மகளின் எதிர்காலத்துக்காக ஒரே நேரத்தில் பெரிய தொகையை சேமிக்க முடியாத பெற்றோருக்கு, ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை ஒதுக்கி வைக்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். இப்போதே சேமிக்க தொடங்கினால், மகளின் உயர்கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பின்னாளில் ஒரு கணிசமான தொகையை உருவாக்க முடியும்.


Click it and Unblock the Notifications
