இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால்தான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனார் - தயாநிதி மாறன் பேச்சு!
சென்னை : நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் இந்தியை திணிக்காதே என்று தான் சொல்கிறோம் என்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால்தான் சுந்தர் பிச்சை கூகுள் சி.இ.ஓ ஆனார் என்றும் தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
நாம் எப்போதெல்லாம் முன்னேற்றத்தின் பாதையில் செல்கிறோமோ அப்போதெல்லாம் நம்மைப் பிரித்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் என தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

திமுக பொதுக்கூட்டம்
திமுக முப்பெரும் விழாவினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயன்புரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே குரல்
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, "திமுக தொடங்கி 73 ஆண்டுகள் ஆகிறது. 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக அன்று எந்தக் குரலை ஒழித்ததோ அதே குரலில் 73 ஆண்டுகளாக இன்றைக்கும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அப்போதும் இந்தி திணிப்பு, இன்றைக்கும் அதே பிரச்சனை தான். இட ஒதுக்கீடு, அனைவருக்கும் கல்விக் கொடுங்கள் என்றோம்.. இன்றும் கொடுக்கவில்லை.

வந்தார் ஸ்டாலின்
இட ஒதுக்கீடு கொடுக்க மறுத்தார்கள். சண்டை போட்டு சண்டை போட்டு இட ஒதுக்கீட்டை வாங்கி வந்திருக்கிறோம். இன்று என்ன பிரச்சனை? அதே இட ஒதுக்கீட்டைத் தான் நாம் இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நாம் வந்திருக்கிறோம். கருணாநிதி மறைந்தபிறகு அவர் கொள்கையை எடுத்துச் செல்ல யாரும் இல்லை என நினைத்தார்கள். வந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

மதத்தின் பெயரால்
இன்று மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் நம்மை ஆளப் பார்க்கிறார்கள். நாம் எப்போதெல்லாம் முன்னேற்றத்தின் பாதையில் செல்கிறோமோ அப்போதெல்லாம் பிரித்துப் பிரித்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அதனை எப்போதும் எதிர்த்து நிற்கின்றவர்கள் நாம்.

டேஞ்சரஸ்
ஸ்டாலின் வந்து என்ன செய்தார்? அவர்களே கருணாநிதியை விட மோசமானவர் ஸ்டாலின் எனச் சொல்கின்ற அளவுக்கு கொள்கையில் எந்த விதத்திலும் இடம் கொடுக்காமல் இது திராவிட மாடல் இயக்கம் என்றார் முதல்வர் ஸ்டாலின். திராவிட மாடல் என்றால் என்ன? அனைவரும் சமம்.. அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கும் முன்னேற்றம்.. இது தவறா என்ன?

இந்திக்கு எதிரானவர்கள் அல்ல
நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியை திணிக்காதே என்று தான் சொன்னோம். என்ன பிரச்சனை என்று பார்த்தீர்களா? வட இந்தியர்கள் எல்லாம் இந்தி பேசுகிறார்கள். தேவைப்பட்டால் நாங்களும் இந்தி பேச தயார்.

கூகுள் சி.இ.ஓ
இந்தியை படிக்காமல் ஆங்கிலத்தில் படித்ததால் தான் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர். இந்த நிலை தொடர வேண்டும் என்றால் ஆதிக்க சக்தியை எதிர்க்க வேண்டும். நமக்குத் தேவை நம் தளபதியை பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றி தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக மாற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications